சேலம்: கேட்டது செல்போன்; கிடைத்தது என்ன? -சிறைபிடிக்கப்பட்ட டெலிவரி பாய்

சேலம்: கேட்டது செல்போன்; கிடைத்தது என்ன? -சிறைபிடிக்கப்பட்ட டெலிவரி பாய்
சேலம்: கேட்டது செல்போன்; கிடைத்தது என்ன? -சிறைபிடிக்கப்பட்ட டெலிவரி பாய்

உறவினருக்கு தனது சொந்த பணத்தை கொடுக்க வேண்டிய நிலை தனராஜிக்கு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், வீரகனூரில், பிளிப்கார்ட் இணையதளத்தில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு கல் அனுப்பி வைத்து ரு,11040-/ மோசடி நடைபெற்றுள்ளது. 
வீரகனூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 40 வயதான தனராஜ். சமூக ஆர்வலரான இவர், தனது உறவினர் அய்யாதுரை என்பவருக்கு கடந்த 02/03/2023 அன்று பிளிப்கார்ட் இணையதளம் வழியாக உயர் ரக செல்போன் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். டெலிவரி வந்ததும், அதனை பிரித்துப் பார்த்த பொழுது பார்சல் உள்ளே கல்லை வைத்து அனுப்பி வைத்திருந்ததை கண்டு தனராஜ் அதிர்ச்சி அடைந்தார். 
உடனடியாக பிளிப்கார்ட்  நுகர்வோர் உதவி மையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை தெரிவித்தபோது, அவர்கள் ’’புகார் எதுவும் கொடுக்க வேண்டாம். நாங்கள் உங்களது பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம்’’ என்று சமாதானப்படுத்தி உள்ளனர். சுமார் 20 நாட்கள் காலம் தாழ்த்தியதால், தன்னால் ஏமாற்றமடைந்த தனது உறவினருக்கு தனது சொந்த பணத்தை கொடுக்க வேண்டிய நிலை தனராஜிக்கு ஏற்பட்டது.
பிளிப்கார்ட் நிர்வாகம் உடனடியாக தனது பணத்தை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தனராஜ் கேட்டபோது, ‘’அந்த பார்சலில் உண்மையான செல்போன் தான் அனுப்பியிருந்தோம். கொரியர் டெலிவரியில் தான் ஏதோ தில்லு முல்லு நடைபெற்றுள்ளது. அதனால், பணத்தை திரும்ப செலுத்த முடியாது’’ என்று நிர்வாகம் கை விரித்து விட்டது. இதனால், செய்வது அறியாமல் திகைத்த தனராஜ், தனக்கு செல்போன் பார்சல் கொடுத்த இ-கார்ட் கொரியர் சர்வீஸ் டெலிவரி பாயை சிறை பிடித்தார். இதனை அறிந்து ஆத்தூர் இ-கார்ட் கூரியர் சர்வீஸ் மேலாளர் வீரகனூருக்கு வந்து, ’’உங்களுக்கு அனுப்பப்பட்ட செல்போன் குஜராத் மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ளது. இதை எங்களது செக்யூரிட்டி டீம் கண்டுபிடித்து தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதனை சரி செய்து உங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்கிறேன்’’என்று வீரகனூர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். இதனால், சமரசம் அடைந்த தனராஜ் டெலிவரி பாயை விடுவித்தார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com