'ஆதாரங்களை ஆளுநர் கொடுக்க வேண்டும்' - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள்

'ஆதாரங்களை ஆளுநர் கொடுக்க வேண்டும்' - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள்
'ஆதாரங்களை ஆளுநர் கொடுக்க வேண்டும்' - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள்

பொறுப்பான பதவியில் இருக்கும் ஆளுநர் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் பணம் வாங்கியதற்கான ஆதாரங்களை வெளியிடாவிட்டால் ஆளுநர் ஆர்.என்.ரவி தென் மாவட்டங்களுக்கு வர முடியாது என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராளிகள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 13 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடப்பட்டது. காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை பார்க்க வந்த நடிகர் ரஜினிகாந்த, "இது மக்கள் போராட்டம் அல்ல. மக்களைப் பகடை காயாகப் பயன்படுத்தி தீவிரவாத கும்பல் உள்ளே நுழைந்து விட்டது. போலீஸ் மீது கை வைத்தால் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை" என்று பேட்டி கொடுத்து ஒட்டு மொத்த தமிழகத்தையும் பரபரப்பாக்கினார். 
அப்போது ரஜினிக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் எதிர் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர். பா.ஜ.க மட்டும் ரஜினிக்கு ஆதரவாக பேசினார். ஐந்து ஆண்டுகளாக மூடி கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்த நிறுவனம் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களைச் சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
அப்போது அவர் "ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசினார். இந்தியாவுக்கு தேவையான 40 சதவீத காப்பரை ஸ்டெர்லைட் ஆலையை உற்பத்தி செய்து வந்தது. அந்த ஆலையைப் போராட்டக்காரர்கள் மூட வைத்து விட்டனர். போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு நிதி தாராளமாய் கிடைத்ததே அதற்கு காரணம்" என்று சொன்னார். இது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராளிகள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. 
ஆலைக்கு எதிரான போராட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மகேஷிடம் கேட்டோம். "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிடுங்குவது எல்லாம் தேவையற்ற ஆணிகள்தான். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று ஆளுநர் போகிற போக்கில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராளிகள் மீது பழி சுமத்தி இருக்கிறார். தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அறனுக்கு எதிராக அவர் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வரிசையில் தான் இந்த பேச்சையும் பார்க்க வேண்டியது இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களால் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் புகார் தான் இது. எனவே ஆளுநர் அதற்கு தகுந்த ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லையென்றால், அவர் தென் மாவட்டங்களுக்கு வர முடியாது" என்றார்.
ஆலைக்கு எதிரான போராட்டக்காரர் பாத்திமா பாபு நம்மிடம், "பொறுப்பான பதவியில் இருக்கும் ஆளுநர் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது. ஆதாரம் இல்லாமல் யார் மீதும் பழியை சுமத்த கூடாது" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com