'தொகுதி மாறுகிறாரா ஆ.ராசா?' -நீலகிரி தி.மு.க-வில் 'திடீர்' விவாதம்

'தொகுதி மாறுகிறாரா ஆ.ராசா?' -நீலகிரி தி.மு.க-வில் 'திடீர்' விவாதம்
'தொகுதி மாறுகிறாரா ஆ.ராசா?' -நீலகிரி தி.மு.க-வில் 'திடீர்' விவாதம்

அதனால்தான் நீலகிரி புளிக்கும்! என்று யோசிக்க துவங்கியுள்ளார்” என்கிறார்கள்.

சரியாக இன்னும் ஒரு வருட காலம்தான் இருக்கிறது இந்திய தேசம் தனது அடுத்த நாடாளுமன்ற தேர்தலைச் சந்திப்பதற்கு. இதற்காக அனைத்துக் கட்சிகளும் வாரிச்சுருட்டிக் கொண்டு பணிகளை துவக்கிவிட்டனர். ஏற்கனவே எம்.பி.யாக இருப்போர் அதை தக்க வைத்துக் கொள்ளவும், புதிதாக எம்.பி.யாக விரும்புவோர் சீட் பெறும் முயற்சியிலும் இறங்கிவிட்டனர். அதிலும், இந்த முறை பா.ஜ.க.,வை வீழ்த்தி மீண்டும் தேசத்தை கைப்பற்றிட துடிக்கிறது காங்கிரஸ். அதன் கூட்டணியில் உள்ள தி.மு.க. போன்ற கட்சிகள் தங்கள் சார்பாக இத்தனை மத்திய அமைச்சர்களை உருவாக்கிட வேண்டும் எனும்  இலக்குடன் காய் நகர்த்தி வருகின்றனர்.
அதற்காக தனது மக்களவை எம்.பி.க்களை தங்களது தொகுதியில் கூடுதல் அக்கறையுடன் பணியாற்ற சொல்லியுள்ளது. குறிப்பாக கனிமொழி, ராசா, தமிழச்சி போன்ற வி.ஐ.பி. எம்.பி.க்களை கூடுதல் உழைப்பை தொகுதியில் காட்டிட பணித்துள்ளது தலைமை எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் எல்லோரும் சுறு சுறுப்பைக் காட்ட துவங்கியுள்ள நிலையில், ஆ.ராசா தரப்பில் மட்டும் இன்னும் யோசனை காட்டப்படுகிறது.
காரணம், ஆ.ராசா இப்போது தான் எம்.பி.,யாக இருக்கும் நீலகிரி தொகுதியை இந்த முறை தவிர்த்துவிட்டு வேறு தொகுதிக்கு மாறும் யோசனையில் இருப்பதாக ஒரு தகவல் தடதடக்கிறது. ஏன்? என்று இறங்கி விசாரித்தபோது 3 விதமான காரணங்கள் கிடைக்கின்றன. அதாவது, ’தனித்தொகுதியான நீலகிரியில் அருந்ததியர் இன மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. எனவே அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் வகையில் நீலகிரியை விட்டு நகர முடிவெடுத்துள்ளார் ஆ.ராசா’ என்று ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால், அரசியல் விமர்சகர்களோ ‘தனித்தொகுதியான நீலகிரியை பா.ஜ.க வலுவாக குறிவைத்துள்ளது. தங்களின் மத்திய இணையமைச்சரான எல்.முருகனை இங்கே நிறுத்துகிறார்கள். அதை முன்னிட்டு பா.ஜ.க.,வின் தேசிய தலைவரான நட்டா தனது பிரசாரத்தை இங்கேதான் துவக்கினார். முருகனை வெற்றி பெற வைக்க ராசாவுக்கு மிக கடுமையான சவால்களை உருவாக்க துவங்கியுள்ளது பா.ஜ.க. அதனால், நீலகிரியை விட்டு விலகும் முடிவை ஆ.ராசா யோசிக்க துவங்கியுள்ளார்’ என்கிறார்கள்.
ஆனால், திமுகவினர் சிலரோ ‘கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆ.ராசாவுக்கு கழக கட்டமைப்பு பணிகள் நிறைய உள்ளது. அவர் கட்சியை சித்தாந்த ரீதியில் வலுப்படுத்த பல முக்கிய வேலைகளை பண்ணிக் கொண்டிருக்கிறார். இதற்காக தினமும் அவர் அறிவாலயத்துக்கு வரவும், சென்னையில் அங்குமிங்கும் செல்லவும் வேண்டியது அவசியமாக உள்ளது. ஆனால், சென்னையிலிருந்து வெகு தொலைவில் மாநிலத்தின் இன்னொரு எல்லையில் இருக்கும் நீலகிரி எம்.பி.யாக அவர் இருக்கும் பட்சத்தில் அவரால் அறிவாலயத்துக்கு அடிக்கடி வர இயலவில்லை. இது அரசியல் ரீதியாக அவருக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய  அசெளகரியமாக இருக்கிறது.
அதனால்தான், திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடலாமா? என்று யோசிக்கிறார். மேலும், தலைமையின் கண் பார்வையில் தான் எப்பவுமே இருக்க வேண்டும். இல்லையென்றால், தன்னை கட்சியில் சற்றே ஓரங்கட்டிட சிலர் மூவ் பண்ணுவதாகவும் பதற்றம் கொள்கிறார். அதனால்தான் நீலகிரி புளிக்கும்! என்று யோசிக்க துவங்கியுள்ளார்” என்கிறார்கள். 
ஆ.ராசா தொகுதி மாறுகிறாரா? என்று நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக்கிடம் கேட்டபோது, “தனது களச்செயல்பாடுகள் மூலமாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் ஆ.ராசா. அவர்தான் மீண்டும் தங்களின் எம்.பி.யாகவும், மத்தியமைச்சராகவும் வரவேண்டும் என்பதே இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு. இதுதான் யதார்த்த நிலை. இதைத்தாண்டி மற்ற விஷயங்கள் எதுவும் எங்களுக்கு தெரியாது” என்றார் எளிமையாக.
புரியுது!
-எஸ்.ஷக்தி 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com