'மாவட்டம் தோறும் மக்களைச் சந்திக்க உள்ளோம்' - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

'மாவட்டம் தோறும் மக்களைச் சந்திக்க உள்ளோம்' - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
'மாவட்டம் தோறும் மக்களைச் சந்திக்க உள்ளோம்' - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

8 தோல்விகளைச் சந்தித்தது தான் சூப்பர் எம்.ஜி.ஆர். எடப்பாடி பழனிசாமி செய்த சாதனை

அ.தி.மு.கவில் உள்ள நிர்வாகிகளைத் தனது பண பலத்தை வைத்து வாங்கிவிட்டதாகவும், அ.தி.மு.க. சட்ட விதிகளை உடைத்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்திரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர். அப்போது, முதலில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள், புரட்சித் தலைவி அம்மா பிறந்தநாள், அ.தி.மு.க. 50 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும்வகையில், முப்பெரும் விழா வரும் 24ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.

அ.தி.மு.கவில் சர்வாதிகாரம், பணபலம் படைத்தவர்கள் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடும் வகையில், சட்டதிருத்தம் செய்துள்ளனர். அ.தி.மு.கவின் ஒட்டுமொத்த சட்டவிதிகளையும் மாற்றியுள்ளனர். எம்.ஜி.ஆர். வேடத்தில் எடப்பாடி பழனிசாமியை பார்த்து தொண்டர்களும் பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 8 முறை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தோல்வியைத் தழுவியுள்ளார்.

அதுமட்டுமல்ல, ஈரோடு இடைத்தேர்தலில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும், பா.ஜ.கவினரும், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வாக்களிக்கவில்லை என்றால் அ.தி.மு.க. டெபாசிட்கூட வாங்கியிருக்க முடியாது. ஈரோட்டில் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தோல்விக்குக் காரணம், மக்கள் எடப்பாடி பழனிசாமியை ஏற்கவில்லை என்றுதான் அர்த்தம்.

கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். அது குறித்து, கர்நாடகா பா.ஜ.க. தஸலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்' என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், 'எட்டு தோல்விகளைச் சந்தித்தது தான் சூப்பர் எம்.ஜி.ஆர். செய்த சாதனையாகச் சொல்லப்படுகிறது.

அ.தி.மு.கவில் தற்போது மாயை நிலவுகிறது. அதாவது, அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் அரசியல் மாயையில் சிக்கியுள்ளது. இந்த மாயை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்றால்தான் விலகும். அந்தப் பணியைத் தற்போது தொடங்கியுள்ளோம். எனவே, மக்கள் மன்றத்தை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடங்கிவிட்டோம். வரும் 24ம் தேதி திருச்சியில் பிரமாண்ட அளவில் முப்பெரும் விழா மற்றும் மாநாடு நடைபெறும். இதனையடுத்து, மாவட்டம் தோறும் மக்களைச் சந்திக்க உள்ளோம்' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com