ஆளுநரின் பேச்சுக்கு தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்
தமிழக ஆளுநர் ரவியின், ஸ்டெர்லைட் போராட்டம் மற்றும் சட்டப்பேரவை மசோதா பேச்சுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, பேசிய அவர், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 சதவீதம் காப்பர் தேவையை நிறைவேற்றி வந்தது. ஆனால், வெளிநாட்டு சக்திகள் துணையுடன், வெளிநாட்டு நிதி மூலம் மக்களைத் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டுநிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் 250 கோடி ரூபாய் நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டில் இருந்து வரும் நிதியை மத்திய அரசு முறைப்படுத்தியுள்ளது' என்றவர்,
'ஒரு மசாதோவை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார் என்றால், நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்றுதான் பொருள் கொள்ளவேண்டும் என, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது' என்றார்.
ஆளுநரின் பேச்சுக்கு தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனிடையே, வரும் 12ம் தேதி ஆளுநர் ரவியைக் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. முக்கியத் தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், ஆளுநர் பேச்சுக்குத் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாழ்வுரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மக்களைக் கொச்சைப்படுத்தும் செயலாகும். ஆளுநரின் பேச்சு கண்டனத்திற்குரியது.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை என்பதிலிருந்து அந்தச் சட்டம் நிறைவேற்றப்படக் கூடாது என்று ஆளுநர் நினைக்கிறார். அவரது கருத்து அரசியல் சாசனத்தை மீறிய செயல்.
தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வரும் ஆளுநர் ரவி, ஆளுநர் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டதால், அவர் உடனே பதவி விலகவேண்டும் என்றார்.
இதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராடிய மக்களையும், தியாகம் செய்த மக்களையும் அவமானப்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்பட்டார்.
அத்துமீறிச் செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். ஆளுநரின் அத்துமீறிய செயலுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்பி, தமிழகத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அனைவரும் முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.