பா.ஜ.கவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கறுப்பு கொடி காட்டப்படும் என்று, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி சென்னைக்கு நாளை வருகிறார் . சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை திறந்துவைக்கிறார். பின்னர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
தாம்பரம்-செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சேவையையும், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், மயிலாப்பூர், ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா மற்றும் பல்லாவரத்தில் சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிலையில், நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தமிழக பா.ஜ.க. முடிவு செய்து, அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, பா.ஜ.கவின் கூட்டணி கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கோலார் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மோடி சமூகத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இதில், ராகுல் காந்தி குற்றவாளி என்றும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதில், ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ராகுல் காந்திக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய மனு மீது, மே மாதம் 3ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், பா.ஜ.கவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வருகையையொட்டி, தமிழக காங்கிரஸ் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறுகையில், 'அவதூறு வழக்கில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பிரதமர் சென்னை வருகையின்போது காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் பிரதமர் நரேந்திரமோடி செல்லும் அனைத்து இடங்களிலும் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும்' என்றார்.