மேயரின் அலுவலக அறையில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்.
ராஜ்யசபா உறுப்பினரும், திருச்சி திமுக முன்னோடியுமான சிவா வீட்டில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, திமுகவின் மாவட்ட பொருளாளர் துரைராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், வட்டச் செயலாளர் மிளகுபாறை ராமதாஸ், திருப்பதி ஆகியோரை கட்சியை விட்டு நீக்கி அறிவிப்பை வெளியிட்டது திமுக. அவர்களும் சிறைக்குப் போய்விட்டு வெளியே வந்து, தற்போது மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் போய்க் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கட்சியை விட்டு நீக்கப்பட்டால் அவர்கள் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது, கட்சி நிர்வாகிகள் அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது நடைமுறை.ஆனால் 'சிவா வீட்டில் ஒரு சம்பவம் நடந்து விட்டது. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீங்கள் அழுவுற மாதிரி அழுதுவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்' என்று திமுகத் தலைமை சொன்னதாகவே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல கட்சி நிர்வாகிகளும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மற்ற கட்சியினரை, பொதுமக்களை எவ்வளவு ஏமாளிகளாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நேற்று நடந்த ஒரு நிகழ்வு உறுதிப்படுத்தி விட்டது.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட இவர்கள் சமீபத்தில் நடந்த ராமஜெயம் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது உள்ளூரில் சலசலப்பை ஏற்படுத்தியது என்றாலும், அது தனிப்பட்ட நிகழ்ச்சி என்று சொல்லி சமாளித்தார்கள்.ஆறாம் தேதியன்று திமுக மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், தன்னுடைய பிறந்தநாளை ஒட்டி திருச்சி மாநகராட்சி கட்டிடத்தில் அமைந்துள்ள மேயரின் அலுவலக அறையில் கேக் வெட்டி, கொண்டாடியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளரும், மேயருமான அன்பழகன், முத்துசெல்வத்திற்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவம் செய்திருக்கிறார். தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முத்து செல்வத்துக்கு கேக் ஊட்டி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அந்தப் படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து மகிழ்ந்து இருக்கிறார்கள்.
- ஷானு.