கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் நாசர் அஞ்சலி செலுத்தும் போது சர்ச்சை வெடித்துள்ளது
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த, அமைச்சர் நாசரின் காலணிகளை, அவரது உதவியாளர் ஒருவர் கையில் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மெரினாவில் அமைந்துள்ளது தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவிடம். அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்ற அமைச்சர் நாசர், தனது காலில் இருந்த காலணிகளைக் கழற்றி, ஒரு ஓரமாக வைத்தார். அப்போது, ப்ளூ சட்டை போட்ட ஒருவர் வேகமாக ஓடி வந்து, பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அமைச்சர் நாசரின் காலணிகளைக் கையில் எடுத்துச் சென்றார்.
கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் நாசர் அஞ்சலி செலுத்திய பின்னர், தனது காருக்கு திரும்பினார். அப்போது, அதே ப்ளூ சட்டை போட்ட நபர் அமைச்சரின் காலணிகளை எடுத்து வந்து காருக்குள் வைத்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக ஊடங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் காலணிகளை எடுத்து வரும் நபர் அவரது உதவியாளராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருவள்ளூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அமைச்சர் நாசர். அப்போது, நாற்காலி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், ஆவேசம் அடைந்த அமைச்சர் நாசர், கல் எறியும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமைச்சர் நாசரின் காலணிகளை அவரது உதவியாளர் என்று கூறப்படும் நபர் கையில் எடுத்து வரும் வீடியோ காட்சி சமூக ஊடங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.