சென்னை: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்திக்க முயற்சி
பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், பிரதமரை சந்திக்க முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு நாளை மாலை வருகிறார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை மோடி திறந்துவைக்கிறார். இதனைத்தொடர்ந்து, மாலை 4 மணியளவில் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரமாண்டமான விழா நடைபெறுகிறது. அப்போது, சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
மேலும், தாம்பரம்-செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சேவையைத் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதனிடையே, மயிலாப்பூர், ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும், மாலை 6 மணியளவில் பல்லாவரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிலையில், நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.கவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தலைமைப் பதவியைக் குறிவைத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வந்தனர்.
இதில், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனிடையே, அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். தற்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மேலிடம் ஆசி இருந்தால்தான், தமிழகத்தில் தி.மு.கவை எதிர்கொள்ள முடியும், அ.தி.மு.க. தலைமையை முழுமையாக கைப்பற்ற முடியும் என்பதால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ.க. தயவை எதிர்நோக்கி உள்ளனர்.
மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சந்திக்கத் தனித்தனியே நேரம் கேட்டுள்ளனர்.