உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக என்னை குத்திக் காட்டுகிறார்கள்.
சட்டப்பேரவைத் தலைவர் பேசுவதை குறைத்துக் கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேச அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது துணைக்கேள்வி எழுப்ப வேல்முருகனுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது ஆவேசமான வேல்முருகன், ’இங்கே பேசுவதை குறைத்துக் கொண்டு மற்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்புக் கொடுங்கள்’’என சபாநாயகரை பார்த்து பேசினார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர், ’’யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்? யாருக்குக் கொடுக்க கூடாது என்பது தனக்கு தெரியும், பேரவையில் பெரிய சத்தமெல்லாம் போடக்கூடாது’’என வேல்முருகனை பேரவைத்தலைவர் அப்பாவு கண்டித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த வேல்முருகன், ’என் தொகுதி சார்ந்த நிஷா எனும் பெண், நீட் பயிற்சி மையத்திற்கு சென்று திரும்பும் போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மான கடிதம் வழங்கியும், சபாநாயகர் பேச அனுமதி வழங்கவில்லை’எனக் குற்றம் சாட்டினார்.
’’தெப்பக்குளம் விபத்து உட்பட 10 க்கும் மேற்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியும் சபாநாயகர் எடுத்துக்கொள்ளவில்லை. சபாநாயகர் மூத்த உறுப்பினர். அவரை ஒரு போதும் மிரட்டுவது போல் பேசியது கிடையாது. ஆனால், அவர் அது போன்ற அவைக்குறிப்புகளில் பதிவு செய்து வருவது ஏற்புடையதல்ல.
இன்றும் கூட சட்டம் படித்த நான், சட்டமன்ற விதிகளை தெரிந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்ற போது, வேல்முருகன் மிரட்டுவது போல அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டிருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக என்னை குத்திக் காட்டுவதும், கேலி கிண்டல் அடிப்பதையும் சபாநாயகர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மூத்த உறுப்பினரான என்னை கடைசி இருக்கையில் அமரவைத்துவிட்டு புதிய உறுப்பினர்களை எனக்கு முன் அமர வைப்பது எந்த சட்டமன்ற விதிகளில் வருகிறது’’எனவும் கேள்வி எழுப்பினார்.