ஈரோடு: அணி மாறத் தயாராகும் தோப்பு வெங்கடாச்சலம்? - பின்னணியில் அமைச்சர் முத்துசாமியா?

ஈரோடு: அணி மாறத் தயாராகும் தோப்பு வெங்கடாச்சலம்? - பின்னணியில் அமைச்சர் முத்துசாமியா?
ஈரோடு: அணி மாறத் தயாராகும் தோப்பு வெங்கடாச்சலம்? - பின்னணியில் அமைச்சர் முத்துசாமியா?

'தி.மு.க-வில் உயர் பதவி' கிடைக்காத அதிருப்தியில் தோப்பு வெங்கடாச்சலம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

தி.மு.க-வில் தனி மரமாக நிற்பதால் மீண்டும் வேறு கட்சியில் ஐக்கியமாகி தோப்பாக மாறிவிடும் ஐடியாவில் இருக்கிறார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்’ என்று கடந்த சில நாட்களாகப் பரபரப்பு நிலவி வருகிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தோப்புப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க-வில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் சைலண்டாக உள்ளே நுழைந்து பதமாக அரசியல் செய்து பெருந்துறை எம்.எல்.ஏ சீட்வாங்கினார். பின்னர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான பின் அவருடைய அரசியல்  வாழ்க்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குச் சென்றது. அப்போதுதான் தன்னை ‘தோப்பு’ வெங்கடாசலம் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்.

பின்னர் இவருடைய அரசியல் பயணம் அடுத்தடுத்த  உயரத்திற்குச் சென்றது வருவாய்த்துறை, மாசுக் கட்டுப்பாட்டுத்துறை என வெயிட்டான துறைகளின் அமைச்சராக வலம் வந்தார். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவே 'ஷாக்' ஆகும் வகையில் சில மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வந்ததால் அவருடைய  குட் புக்கில் இடம் பிடித்தவர் மீண்டும் மீண்டும் அ.தி.மு.க-வில் வலுவான பதவிகளுக்கு முன்னேறினார். அப்போதைய அ.தி.மு.க-வில் செங்கோட்டையனின் கரங்கள் வலுவில்லாமல் இருந்தது தோப்புவின் வளர்ச்சிக்கு  பெரும் வசதியாகிப் போனது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு  செங்கோட்டையனை மீண்டும் ஃபார்முக்கு கொண்டு வந்தார் சசிகலா. சசிகலா  சிறை செல்லும் முன் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியிலிருந்து இறக்கியதும், தன்னைத்தான் முதல்வர் ஆக்க போகிறார் என்று செங்கோட்டையன் கனவு கண்டார். ஆனால் சசிகலாவின்  சாய்ஸ் எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பியது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தொடர்ந்தார் செங்கோட்டையன். ஆனால் ஈரோட்டில் தனக்கு ஆகாத பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்துடன் முரண்பாடு கொள்ளத் தொடங்கியுள்ளார். தோப்பு  வெங்கடாசலம்  ‘எம்.ஜி.ஆர்., அம்மா காலத்து அரசியல்வாதியாச்சே.. சீனியராச்சே..’ என்றெல்லாம் யோசிக்காமல் செங்கோட்டையனுடன் தொடர்ந்து முரண்பாடு கொண்டார் தோப்பு.

அது மட்டுமில்லாது ஈரோட்டின்  மற்றொரு அமைச்சரான கருப்பணனோடு நேரடி மோதலில் இறங்கினார் தோப்பு வெங்கடாசலம். இதன் விளைவு 2021 தேர்தல் நேரத்தில் எடப்பாடிக்குத் தோப்பு வெங்கடாசலத்தின் மீது சில பல விஷயங்களில் எரிச்சல்கள் உருவானது. இதனால் தோப்பு வெங்கடாசலம் எவ்வளவு முயன்றும் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. 

அதோடு அவரிடமிருந்த பதவிகளும் பறிக்கப்பட்டன. இதனால் கடுப்பான தோப்பு சுயேச்சையாகப் போட்டியில் இறங்கியதால் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. சுயேச்சையாக நின்றாலும் கூட வலுவாகப் பிரசாரம் செய்த தோப்பு வெங்கடாசலம் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து கடைசியில் தோல்வியை தழுவினார்.

தேர்தலுக்குப் பின் தி.மு.க ஆட்சி அமைந்த நிலையில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். மாஜி அமைச்சர், அ.தி.மு.க-வில் வலுவான நிலையிலிருந்தவர் என்பதால் தி.மு.க-வில் தனக்குப் பெரிய பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்ட நிலையிலும் தோப்புவுக்கு எந்த பதவி உயர்வோ, மேல் பொறுப்போ எதுவும் கிடைக்கவில்லை. 

இதனால் மனம் நொந்து இருந்தவர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழகத்தின் அத்தனை மாவட்ட கட்சியினரும் அங்கே வந்து குவிந்து பிரசாரம் செய்த நிலையில் இவரோ அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனால் தோப்பு வெங்கடாசலம்  மீது தி.மு.க தலைமை கடும் கோபத்தில் இருப்பதாக மூத்த அரசியல் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில்தான் இப்போது ‘தோப்பு தி.மு.க-வை விட்டு விலகப் போகிறார். மீண்டும் தாய்க்கட்சியான அ.தி.மு.க-வில் இணையப் போகிறாரா அல்லது பா.ஜ.க-வில் இணையப் போகிறாரா’ என்று பரபரப்புகள் தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கத் தொடங்கின. ஆனால் தோப்பு வெங்கடாச்சலத்தை ரொம்ப சிரமப்பட்டு அ.தி.மு.க-விலிருந்து  வெளியேற்றியவர்கள் அவர் மீண்டும் 'எந்த சூழலிலும் உள்ளே வந்துவிடக் கூடாது என்று பெரியளவில் முட்டுக்கட்டை போட்டுள்ளனர்' என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாஜ.க-வுக்கு போனால் ஏதாவது பதவி கிடைக்கலாம். ஆனால் அதை வைத்து தமிழகத்தில் எந்த கெத்து அரசியலும் பண்ண முடியாது என்பது தோப்புவின் எண்ணம். அதனால் அவரது அரசியல் மூவ் என்ன என்பது இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது. மாஜியின் ஆதரவாளர்களோ ‘தி.மு.க-வில் அண்ணன் டம்மியாக்கப்பட காரணமே ஈரோட்டை சேர்ந்த அமைச்சர் முத்துசாமியால்தான் என புகார் தெரிவித்துள்ளனர். 

சின்ன இடம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக களப்பணியாற்றி தன்னை நிரூபிக்கும் திறனுடையவர் தோப்பு வெங்கடாச்சலம். அவர் முன்னேறிவிட்டால் தனக்கு இடைஞ்சலாகி விடும் என்று தோப்புவை முன்னேறவிடாமல் தடுக்கிறார்’ என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஆனால் அமைச்சர் முத்துசாமி தரப்போ இதைக் கடுமையாக மறுத்து ‘தி.மு.க ஒரு ஜனநாயக இயக்கம். 

தாராளமாக யார் வேண்டுமானாலும் தலைவர், சின்னவரைச் சந்திக்கலாம். தகுதியுள்ளவர்களுக்குத் தலைமை நிச்சயம் உயர்வளிக்கும். தோப்புவின் வளர்ச்சியிலோ, வீழ்ச்சியிலோ எங்களுக்கு எந்த தொடர்புமில்லை” என்கிறார்கள். இது தொடர்பாக தோப்பு வெங்கடாசலத்திடம்  கேட்டபோது “நீங்களாச்சும் கேட்குறீங்க. ஆனால் ஆளாளுக்கு என்னென்னவோ எழுதுறாங்க. வெயிட் பண்ணுங்க’ என்று சிரித்தபடியே முடித்தார். தனி மரம் தோப்பாகலாம். ஆனால் எந்த தோப்பில் இணைந்து? என்பதுதான் பெரிய டிவிஸ்ட்டாக இருக்கிறது.  

- ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com