நாட்டில், குடும்ப அரசியலை ஒழிக்க பா.ஜ.க உறுதி பூண்டுள்ளது
'பா.ஜ.க செய்து வரும் பணியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. பா.ஜ.க மீது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதியும், பொய் பிரசாரமும் இனியும் எடுபடாது' என்று பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க-வின் 44-வது ஆண்டு விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க நிறுவனர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, பா.ஜ.க எம்.பி.க்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 'நாடு முழுவதும் பா.ஜ.க மிக சிறப்பாக வளர்ந்துள்ளது. பா.ஜ.க-வை வளர்க்க தொண்டர்கள் செய்த தியாகங்களை கணக்கில் எண்ணிவிட முடியாது. அந்த அளவு அவர்களது தியாகங்கள் உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு தொண்டர்களின் உழைப்பை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக, ஒவ்வொரு பா.ஜ.க தொண்டர்களையும் வாழ்த்தி, வணங்குகிறோம். வரும் காலத்தில், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சமூக ஊடகங்களை சிறந்த முறையில் பயன்படுத்த பா.ஜ.க-வினருக்கு உரிய பயிற்சி வழங்கப்படும்.
அரசியல் கலாசாரத்தை பா.ஜ.க எப்போதும் மாற்றாது. ஜனநாயக கொள்கைகளை பலப்படுத்த பா.ஜ.க பாடுபட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சியே எங்கள் நோக்கம். ஓட்டு வங்கி அரசியலை பா.ஜ.க என்றுமே விரும்புவதில்லை. நாட்டில், குடும்ப அரசியலை ஒழிக்க பா.ஜ.க உறுதி பூண்டுள்ளது.
பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சதி செய்து வருகின்றனர். பா.ஜ.க செய்து வரும் பணியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. எதிர்க்கட்சிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர். இதனால், பா.ஜ.க குறித்து தவறான பிரசாரத்தை மக்களிடம் பரப்பி வருகிறார்கள். ஆனால், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து உள்ளனர். எதிர்க்கட்சிகளின் சதியும், பொய் பிரசாரமும் மக்களிடம் எடுபடாது' என்றார்.