தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பேசியும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டும் வருகிறார்
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை சமூக வலைதளத்தில் தொடர்ந்து விமர்சித்து வருவதாக பிரபல நடிகையும், பா.ஜ.க முன்னாள் நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் மீது பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த நிர்வாகி ஜி.எஸ்.மணி சென்னை சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க-வில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக பணியாற்றியவர் பிரபல நடிகை காயத்ரி ரகுராம். இவருக்கும், தமிழக பா.ஜ.க தலைமைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பேசியும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டும் வருகிறார்.
குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதாவது மார்ச் 19ம் தேதி நடந்த கூட்டத்தில் பங்கேற்றார் அண்ணாமலை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘பணம் இல்லாத அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்நாடு வளர்ச்சி அடையும். அரசியல் களத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன்’ என்றார்.
சோஷியல் மீடியாக்களில் இது வைரலான நிலையில் பா.ஜ.க-வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம், ‘அண்ணாமலை தற்போது இருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ.3.5 லட்சம். அவர் நடத்தும் வார்ரூம் யூடியூபர்கள் செலவு மாதம் 8 லட்சம். யூடியூபரில் ஒருத்தருக்கு மட்டும் ரூ.2 லட்சம் என செலவு செய்கிறார்.
இப்படி உச்சக்கட்ட ஆடம்பரத்தில் வாழும் அண்ணாமலை யாரையோ அருகில் வைத்துக்கொண்டு ‘பணம் இல்லாத அரசியல் வேண்டும்’ என சொல்வது வேடிக்கையாக இருக்கிறது’ என ‘டுவிட்டர்’ பதிவில் குறிப்பிட்டார். அவரது இந்த பதிவுக்கு பா.ஜ.க தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவுவைச் சேர்ந்த மணி என்பவர், சென்னை சைபர் க்ரைம் காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தமிழக பா.ஜ.க-வில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். ஆனால், அவர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டதால், கட்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீக்கப்பட்டார்.
அதன் பின்னர், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரபரப்பும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.