தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் சட்டமன்றப் பேச்சை சித்தரித்து அவதூறு பரப்பிய அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் சட்டமன்றப் பேச்சை சித்தரித்து அவதூறு பரப்பிய அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த 29 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது தன்னுடைய மரணத்திற்கு பிறகு தனது கல்லறையில் ‘இங்கே கோபாலபுரத்து விசுவாசி உறங்குகிறான்’ என எழுதி வைத்தால் போதும் என்று மிகவும் உருக்கமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் சிலர் அமைச்சர் துரைமுருகன் புகைப்படம் ஒரு கல்லறையில் உள்ளது போன்று சித்தரித்து சில வாசகங்களை குறிப்பிட்டு, அதனுடன் ஒரு ஆடியோவை இணைத்து வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு வதந்தி பரப்பி பிரச்னைகளை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காட்பாடி வடக்குப் பகுதி தி.மு.க செயலாளர் வன்னியராஜா காட்பாடி போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமார் என்பவரிடம் காட்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிறக்கம் செய்து தவறாக சித்தரித்து வீடியோவாக பதிவேற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அமைச்சர் துரைமுருகன் குறித்த தவறான பதிவுகளை முகநூல் பக்கங்களில் இருந்து நீக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.