கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டியதால் தான் பெண் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் திருமணமான ஒரு மாதத்தில் மனைவிக்கு வலிப்பு நோய் வந்ததால் கணவர் வாழ மறுத்துவிட்டாகவும், சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தரவேண்டும் என கணவர் மிரட்டியதால், மனம் உடைந்த மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, திருப்பாலை, பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் அருணா தேவி (23 வயது). இவருக்கு திருமங்கமலம், அலப்பச்சேரி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருடன் கடந்த ஜனவரி 23-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து திருமணமான ஒரு மாதத்தில் சமைக்கும் போது, பாத்திரம் சுட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு லேசான வலிப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இதனை அருணா தேவியின் வீட்டாருக்கு தகவல் சொல்லப்படாமல் இருந்துள்ளனர். பின்னர் தகவல் தெரிந்த பெண்ணின் வீட்டார் வந்தபோது, கணவர், அருணாதேவியுடன் வாழ மறுத்துள்ளார். மேலும் ”உடல் நலக்கோளாறான உன்னுடன் வாழ வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் வரதட்சணை கொடுக்க வேண்டும்” எனக் கேட்டதாக புகாரில் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணின் தந்தை ”நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். தற்போது தான் திருமணத்திற்கு பல லட்சம் செலவு செய்தேன். சில மாதங்கள் போகட்டும், ஏற்பாடு செய்கிறேன்’’எனத் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் அருணா தேவி தனது தந்தை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தந்தை வீட்டில் இருந்த அருணா தேவி, ’தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் கஷ்டம் கொடுக்க வேண்டாம்’ எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பெருமாள் திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருணா தேவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டியதால் தான் பெண் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 2 மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது பெண்ணின் உறவினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டால் தான் பெண்ணின் தற்கொலையில் நியாயம் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.