'இந்தியா பார்க்காத ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் நடக்கும்' - சேலத்தில் அன்புமணி பேட்டி

'இந்தியா பார்க்காத ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் நடக்கும்' - சேலத்தில் அன்புமணி பேட்டி
'இந்தியா பார்க்காத ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் நடக்கும்' - சேலத்தில் அன்புமணி பேட்டி

தமிழகத்தில் ஒரு ஏக்கர் நிலம் கூட நிலக்கரி எடுக்க கொடுக்க மாட்டோம்

'இந்தியா பார்க்காத ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் நடக்கும்' என சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். 
இதுகுறித்துப் பேசிய அவர், ‘’வாழப்பாடி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை ஏற்றியதில் எனக்கு பெருமகிழ்ச்சி. பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பல சாதனைகளை செய்து வருகிறது. ஆட்சியில் அதிமுக இருந்தாலும், திமுக இருந்தாலும் பாமகவினுடைய திட்டங்களை தான் செயல்படுத்தி வருகின்றன. செயல்படுத்தி உள்ளன. செயல்படுத்த வைத்து உள்ளோம். 
உதாரணத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் 16 ஆண்டு கோரிக்கையான வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை கடந்த ஆண்டு திமுக அரசு தாக்கல் செய்தது. நுழைத்தேர்வு வேண்டாம் என்று முதலில் குரல் கொடுத்தது பாமக. அதற்காக உரிய அழுத்தம் கொடுத்து பின், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நுழைத்தேர்வை ரத்து செய்தார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தது தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தான். கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே இந்த சட்டத்தை இயற்ற வைத்தோம். சட்டம் அமலில் இருந்த பத்து மாதங்களில் எந்த ஒரு தற்கொலையும் தமிழகத்தில் நிகழவில்லை.
பின்னர் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசிடமும் அழுத்தம் கொடுத்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். அதற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
சமூக நீதி என்றாலே அதற்கு மறு பெயர் பாட்டாளி மக்கள் கட்சி, மருத்துவர் தான். ஆளுங்கட்சி திமுக, சமூகநீதி சமூகநீதி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் சமூக நீதிக்கு இந்தியாவில் ஒரு தலைவர் என்றால் அது மருத்துவர் தான். தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி மொத்தம் ஆறு இட ஒதுக்கீட்டிற்கு காரணமானவர் மருத்துவர் தான். இப்படி எந்த ஒரு தலைவரும் இந்தியாவில் கிடையாது.
காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று முதன் முதலில் கூறியது பாட்டாளி மக்கள் கட்சி தான். இந்த அன்புமணி தான் முதலில் கூறினான். அதற்காக பிரச்சாரம், போராட்டம் நடத்தி, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உரிய அழுத்தம் கொடுத்து, கொடுத்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வைத்தோம். 
சேலம், மேட்டூர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று 35 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றி தருவதாக கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தனர். ஆனால் செய்யவில்லை.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பலமுறை அழுத்தம் கொடுத்த பிறகு தான், அவரும் இந்த திட்டத்தில் முதல் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து, நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால், அது போதுமானது கிடையாது. 
காவிரியில் 620 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு ஐந்து டிஎம்சி தண்ணீரை எடுத்து சேலம் மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து விடலாம். ஆனால், இதனை செய்வதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லை. எப்படி இருக்கும். தேர்தல் நேரத்தில் உங்களுக்கு 500, 1000 கொடுத்து விடுகிறார்கள். அதை வாங்கி விட்டு அவர்களுக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்வீர்கள். உங்களுக்கு அடுத்த 5 வருஷம் பட்டை நாமம் தான்.
வடிவேல் சொல்வது போல, இந்த பகுதியில் தண்ணீர் இருக்கு, ஆனால் இல்லை. சேலம் மாவட்டம் வழியாக தான் காவிரி நீர் செல்கிறது. அதை பார்க்கலாம், ஆனால் அதை எடுத்து பயன்படுத்த முடியாது. காரணம் அதிமுக, திமுக தான். வேறு எந்த கட்சியும் கிடையாது. கடந்த 55 ஆண்டுகளாக இந்த இரண்டு கட்சிகளும் தான் ஆட்சி செய்கிறது. இவர்கள் தான் காரணம்.
என்னிடம் ஆட்சி, அதிகாரம் இருந்தால் ஒரு மணி நேரத்தில் இந்த திட்டத்தை கொண்டு வருவேன். இரண்டு வருடத்தில் செயல்படுத்தி விடுவேன். தமிழ்நாடு இப்படி இருக்கிறது, பிகார் அப்படி இருக்கிறது என்றெல்லாம் கூற மாட்டேன். அந்த ஒப்பீடும் கிடையாது. தமிழ்நாட்டையும் - சிங்கப்பூரையும் தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு என்னால் வளர்ச்சி கொண்டு வர முடியும். இதை எல்லாம் நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.
காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக வருங்காலத்தில் உருவாகப் போகிறது. இதன் காரணமாகவே உலக நாடுகள் அனல் மின் நிலையங்களை மூடி வருகின்றன. ஆனால் இவர்கள் அடுத்த அடுத்த சுரங்கங்களை விரிவாக்கம் செய்வதற்காக என்எல்சி நிர்வாகத்திற்கு நிலத்தை பிடுங்கி கொடுத்து, உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்காக எவ்வளவோ போராடி பார்த்து விட்டேன். நேற்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தேன். அந்த அறிக்கையில் தமிழகத்தில் புதிதாக மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் விடப்பட்டுள்ளது. அதுவும் பாதுகாக்கப்பட்ட காவிரி வேளாண் மண்டலமான தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியிலும், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும், டெல்டா பகுதியான அரியலூர் மைக்கேல் பட்டி பகுதியிலும் இந்த நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஏலம் விட்டு இருப்பதாக நான் அறிக்கை விட்டிருந்தேன்.
உடனே, தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் கொதித்து எழுந்திருக்கின்றன. இதிலிருந்து நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் சுரங்கம் வரும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இவர்கள் கொதித்து உள்ளார்கள். கடலூர் மாவட்டம் எக்கேடு கெட்டுப் போனாலும் இவர்களுக்கு அக்கறை கிடையாது. 
எத்தனையோ முறை கடலூர் மாவட்டம் ஆபத்தில் இருக்கிறது. காப்பற்றவேண்டும்  என்று நான் போராடி பார்த்தேன். அப்போதெல்லாம் இவர்கள் வரவில்லை. இப்போது கொதிக்கிறார்கள் என்றால், அது தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் சுரங்கம் வருவது தான் காரணம். தஞ்சாவூர் மாவட்டம் மட்டும்தான் பொன் விளைகின்ற பூமியா? கடலூர் மாவட்டம் இல்லையா?
இந்த விவகாரத்தை 10 நாட்களுக்கு முன்பே சட்டப்பேரவையில் நமது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பினார்கள். அப்போது அமைச்சர், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அன்புமணி சொல்வது போல் எல்லாம் கிடையாது. எங்களுக்கு தெரியாமல் யாராவது ஏலம் விட்டுவிட முடியுமா? என்றார் அமைச்சர் தென்னரசு.
அடுத்த நாள் நான் ஆதாரத்தை வெளியிட்டேன். ஆதாரத்தை வெளியிட்ட பிறகு ஆம் உண்மைதான் என்கிறார் அமைச்சர். இப்போ என்ன செய்யப் போகிறீர்கள்? என்று நேற்று நான் அறிக்கை விட்டதற்குப் பிறகு, விவசாய சங்கங்கள், தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைவருக்கும் கோபம் வந்துவிட்டது. ஏன்? கடலூர் மாவட்டம் என்றால் அவர்களுக்கு கவலை இல்லை. ஒரத்தநாடு பகுதியில் நிலக்கரி எடுப்பது தான் அவர்களுக்கு கோபம்.
முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறுகிறார், ’நான் டெல்டா காரன். டெல்டாவில் நிலக்கரி எடுக்க விடமாட்டேன்’ என்கிறார். அப்போ டெல்டா பகுதி இல்லை என்றால் நிலக்கரி எடுக்க விட்டுவிடுவீர்களா? அங்கு மக்கள் இல்லையா? அங்கு விவசாயம் செய்யவில்லையா? அங்கு விவசாயிகள் இல்லையா? வீடு, கிராமம், மக்கள், வாழ்வாதாரம் இல்லையா? டெல்டாவில் மட்டும்தான் இது அனைத்தும் இருக்கிறதா? 
ஒரு முதலமைச்சர் பேசுகிற பேச்சா இது? தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். கடலூரில் எடுத்தாலும் சரி, டெல்டா பகுதியில் எடுத்தாலும் சரி, திருப்பூரில் எடுத்தாலும் சரி, எங்கு எடுத்தாலும் அதை நீங்க தான் தடுத்து பாதுகாக்க வேண்டும்.
டெல்டாவில் எடுத்தால் மட்டும் உங்களுக்கு கோபம் வருகிறது. கடலூரில் எடுத்தால் கோபம் வராதா உங்களுக்கு? என்ன பேச்சு இதெல்லாம். இதை நான் விடப்போவதாக இல்லை. முதலமைச்சர் இரட்டை வேடம் போடாமல், சட்டப்பேரவையிலேயே தமிழகத்தில் ஒரு ஏக்கர் நிலம் கூட நிலக்கரி எடுக்க கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக தெரிவிக்க வேண்டும். 
அதுவரை தொடர்ந்து நான் களத்தில் நின்று போராடுவேன். என் மண்ணையும், என் மக்களையும், என் தண்ணீரையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் நான் சொல்வேன். இதுதான் பாட்டாளி மக்கள் கட்சி. மற்ற கட்சிகள் போன்று நாங்கள் கிடையாது. அடையாளத்துக்காக நாங்கள் அரசியல் செய்வது கிடையாது. உண்மையாக, உணர்வு பூர்வமாக நாங்கள் அரசியல் செய்கின்றோம். விவசாயிகளுக்கு எங்கு பிரச்சனை வந்தாலும் ஓடோடி வந்து குரல் கொடுப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். மக்களாகிய நீங்கள் அதை புரிந்து கொள்ளுங்கள்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் சட்டமாக கொண்டு வாருங்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை. நியாயமான காரணங்களை மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள். இதற்குண்டான தரவுகளை எடுப்பதற்கு ஆறு மணி நேரம் தான் ஆகும். ஆனால் அதை எடுப்பதற்கு இவர்களுக்கு ஒரு வருடமாக மனது வரவில்லை.
தயவு செய்து தமிழக முதலமைச்சர் இன்னும் ஒரு மாதத்திற்குள் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை கொடுங்கள். இல்லையேல் என்னுடைய தம்பிகளை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால், இது சமூக நீதிப் பிரச்சனை. ஜாதி பிரச்சனை கிடையாது. நீங்கள் தானே சொன்னீர்கள் சமூக நீதி என்றால் திமுக என்று. ஒரு வருஷம் ஆகியும் உங்களால் இந்த சமூகநீதி பிரச்னையை தீர்க்க முடியவில்லை. நினைத்துப் பாருங்கள். 
என்னுடைய தம்பிகள் போராட்டத்துக்கு தயாராகி விட்டார்கள். அப்போது நடந்த போராட்டம் வேறு, இப்போது நடந்தால் வேறு விதமாக நடக்கும். இந்தியா பார்க்காத ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் நடக்கும். அதை தவிர்க்க வேண்டும் என்றால், நாங்கள் கேட்கின்ற சமூகநீதி பிரச்சினையை தீர்த்து வையுங்கள். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை கொடுங்கள்" என்று அன்புமணி பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com