'மினி பஸ் திட்டத்தை மீண்டும் கொண்டுவர அரசு பரிசீலிக்குமா?' என்று வி.சி.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி கேள்வி
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. அப்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, சம்பந்தந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி பேசுகையில், சென்னையில் சுற்றுவட்ட வழித்தடத்தில் பேருந்து வசதி ஏற்படுத்திதரப்படுமா? என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், 'சென்னை மாநகராட்சியில் இதுபோன்ற பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், அதற்குப் போதிய வரவேற்பும் இல்லை. வருவாயும் இல்லை. இதனால், அது போன்ற வழித்தட பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, அது குறித்த குறிப்பு தற்போது ஏதும் இல்லை' என்றார்.
அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜியே மீண்டும் ஒரு கேள்வி எழுப்பினார். அதில், 'சென்னை மாநகரப் பேருந்து 519டி தையூர் வரை இயக்கப்படக் கூடிய பேருந்து சேவையை வகாயார் பகுதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், மானாமதி வரை இயக்கப்படக் கூடிய பேருந்து சேவையைத் திருக்கழுக்குன்றம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தவர், முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்த மினி பஸ் திட்டத்தை மீண்டும் கொண்டுவர அரசு பரிசீலிக்குமா?' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், 'கேட்பவர் எஸ்.எஸ்.பாலாஜி, பதிலளிப்பவர் எஸ்.எஸ்.சிவசங்கர். எனவே, பதிலும் Yes Yes என்றே சொல்ல விரும்புகிறேன்' என்றார். அவரது இந்த நகைச்சுவை பதிலால் சட்டப்ரேவையில் சிரிப்பலை எழுந்து அடங்க சிறிது நேரமானது.