எந்தக் கட்சியில் எப்போது சேருவேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்
நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் பரபரப்பான கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். அரசியல் விமர்சனங்களும் அதில் அடக்கம். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘’நான் கடந்த சில தினங்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கிறேன். சமூக வலைதளங்களில் ஒரு பொய் செய்தியானது பரவி வருகிறது. அதாவது நான் அ.தி.மு.க.,வில் இணைந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் போட்டோவை பரப்பி வருகிறார்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இந்தபோது அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் எனக்குப் பூங்கொத்து கொடுத்தார். அது இப்போது நான் பூங்கொத்துக் கொடுத்து அதிமுகவில் சேர்ந்தது மாதிரி வைரலாக்கி வருகின்றனர். பொதுவாகவே என்னைக் குறித்து வதந்திகள் வந்தால் அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன். ஏனென்றால், அது பழகிப் போய்விட்டது.
என்னை யாருடனாவது இணைத்துப் பேசுவார்கள். தற்போது நான் ஒரு கட்சியில் இணைந்தாக வதந்தி பரப்பியுள்ளார்கள். அந்த வதந்தியை எல்லாம் ஒப்பிடும் போது இது சிறந்த வதந்திதான். இந்த செய்தியில் உண்மையில்லை. எந்தக் கட்சியில் எப்போது சேருவேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்’’எனக் கூறியுள்ளார்.