'முன்னாள் முதல்வரே..' - ஓ.பி.எஸ்ஸின் துணைத் தலைவர் பதவியைத் தவிர்த்த சபாநாயகர்

'முன்னாள் முதல்வரே..' - ஓ.பி.எஸ்ஸின் துணைத் தலைவர் பதவியைத் தவிர்த்த சபாநாயகர்
'முன்னாள் முதல்வரே..' - ஓ.பி.எஸ்ஸின் துணைத் தலைவர் பதவியைத் தவிர்த்த சபாநாயகர்

ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்

சட்டப்பேரவை நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற விவாதத்தில், 'முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார்' என்று சபாநாயகர் அப்பாவு அழைத்ததால், ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.கவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தலைமைப் பதவியைக் குறிவைத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வந்தனர்.

இதில், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனிடையே, அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். தற்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருதரப்பிலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவுக்குக் கடிதம் கொடுத்திருந்தனர். தமிழகச் சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சார்பில்,  சபாநாயகருக்கு பரிந்துரை வழங்கப்பட்டது. ஆனால், அதன் மீது அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற  கூட்டத்தொடர் முழுவதையும் அ.தி.மு.கவினர் புறக்கணித்தனர்.

ஏற்கனவே, தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு உறுப்பினர் வீதம்  கருத்து கேட்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் தளவாய் சுந்தரம் பேசிய நிலையில்,  அடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஆன்லைன் தடை சட்ட மசோதாவை  அ.தி.மு.க. ஆதரிப்பதாக தெரிவித்தார். இதற்கு, எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் என்பதால், பேச வாய்ப்பு வழங்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிரான கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, அந்தத் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசி வந்தனர். பேரவையில் உள்ள ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் பேச சபாநாயகர் அழைத்தார். எப்போதும், 'எதிர்க்கட்சித் துணைத் தலைவர்' என்றே ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தநிலையில், இன்று 'முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்' என்று சபாநாயகர் அழைத்தார்.

இதைக்கேட்டு, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை 'எதிர்க்கட்சி துணைத்தலைவர்' என்று அழைத்து வந்த நிலையில் தற்போது, 'முன்னாள் முதல்வர்' என சபாநாயகர் அழைத்ததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com