எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம், இடப்பங்கீடுதான் வேண்டும்
அருந்ததியர்களுக்கு மட்டும் ஏன் 3 சதவீதம் கொடுத்தீர்கள்.அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனில் தனி இடஒதுக்கீடு அல்லவா உருவாக்கித் தந்திருக்க வேண்டும் என சீமான் கேள்வி எழுப்பினார்.
அகில இந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியின் தலைவர் மூக்கையாதேவர் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். 'முத்துராமலிங்க தேவருக்கு ஒரு மாலை வைத்தால் போதும் தேவர் சமுதாய வாக்கு கிடைத்துவிடும் என்று தி.மு.க. அரசு நினைக்கிறது. அதேபோல, பூலித்தேவன், வேலுநாச்சியார் மற்றும் மருதுபாண்டியரை தி.மு.க அரசு கண்டு கொள்ளவில்லை.
தி.மு.க கொண்டாடி வரும் அண்ணாவுக்கே, பதவி பிரமாணம் செய்து வைத்ததவர், அன்றைய தற்காலிக சபாநாயகர் மூக்கையா தேவர்தான். கடந்த 1977ம் ஆண்டு உசிலம்பட்டியில் மூக்கையாதேவர் போட்டியிட்டபோது, அவருக்கு எதிரான வேட்பாளரை எம்.ஜி.ஆர் திரும்பப்பெற்றார். இதற்காக பலரும் எம்.ஜி.ஆரை பாராட்டினார்கள். அதுபோல, நானும் எம்.ஜி.ஆரை பாராட்டுகின்றேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டோம். கேட்டால், அந்த உரிமை மாநில அரசின் கையில் இல்லை என்கின்றனர். உரிமையைக்கூட கையில் வைத்துக் கொள்ளாமல் தி.மு.க ஏன் மாநில உரிமை குறித்துப் பேசுகிறது.
கடந்த 18 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய ஆட்சியில் கூட்டணியாக இருந்த ஒரே கட்சி தி.மு.க மட்டுமே. அப்போது இந்த உரிமையைப் பெற முடியவில்லையா? ஏன் அதற்கான முயற்சியை எடுக்கவில்லை.
நாங்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருக்க விரும்பவில்லை என்கின்றனர் தேவேந்திர குல வேளாளர்கள். அவர்களுக்கான இடஒதுக்கீட்டை பி.சி., எம்.பி.சி. பட்டியலில் வைத்து கொடுக்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை.
எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம், இடப்பங்கீடுதான் வேண்டும். ஏற்கனவே போராடித்தான் ஆதி தமிழ் குடிகள் என்று அழைக்கப்படும், தாழ்த்தப்பட்டோர் மக்களுக்கு 18% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், உள் இடஒதுக்கீடாக அருந்ததியர்களுக்கு மட்டும் ஏன் 3 சதவீதம் கொடுத்தீர்கள். அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனில் தனி இடஒதுக்கீடு அல்லவா உருவாக்கித் தந்திருக்க வேண்டும். அப்படி ஏன் செய்யவில்லை?' எனக் கேள்வி எழுப்பினார்.