நிலக்கரி சுரங்க விவகாரம்: ‘தி.மு.க அரசு கும்பகர்ணன் போல் தூங்கக் கூடாது’ - எடப்பாடி பழனிசாமி சாடல்

நிலக்கரி சுரங்க விவகாரம்: ‘தி.மு.க அரசு கும்பகர்ணன் போல் தூங்கக் கூடாது’ - எடப்பாடி பழனிசாமி சாடல்
நிலக்கரி சுரங்க விவகாரம்: ‘தி.மு.க அரசு கும்பகர்ணன் போல் தூங்கக் கூடாது’ - எடப்பாடி பழனிசாமி சாடல்

திட்டத்தை ரத்து செய்தவற்கு திமுக எம்.பிக்கள் முழு மூச்சோடு செயல்பட வேண்டும்.

நிலக்கரி எடுக்கும் விவகாரத்தில் தி.மு.க அரசு கும்பக் கர்ணன்போல் தூங்காமல் விழித்துக்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டும், 21ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து துறை ரீதியான மானியக்கோரிக்கையின் மீது அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். சட்டப்பேரவை 3 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. இதில் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் அறிவிப்புக் குறித்துச் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைத் தி.மு.க மற்றும் அ.தி.மு.க, பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

இதற்கு முன்னதாகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துப் பேசினார். இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை இதனை மக்களுக்கும் ஊடகங்களுக்குத் தெரிவிப்பது எதிர்க்கட்சி என்ற முறையில் எங்களின் கடமை. மத்திய அரசு 101 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் 3 இடங்களும் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் 105 கிராமங்களில் நிலக்கரி எடுத்துள்ளனர். அங்கே கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. பொன் விளையும் நிலங்களில் எல்லாம் விவசாயிகளை அப்புறப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படும் என டெண்டர் விடப்படுள்ளது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெற்களஞ்சியாகமாகவும், உணவுத்தேவையைப் பூர்த்திச் செய்யும் டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கவே வேளாண் மண்டலமாக அறிவித்தோம். பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் எந்தவொரு தொழிற்சாலையும் அமைக்கக்கூடாது என்பது தான் வேளாண் சட்டத்தின் முக்கிய அம்சம். அப்படி இருக்கையில் மத்திய அரசு 3 இடங்களில் சுரங்கம் அமைக்க டெண்டர் விட்டுள்ளது விவசாயிகளிடையே வேதனையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் தி.மு.க எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார்.அதற்கு மத்திய அரசும் விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் சுரங்கம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் சுரங்கம் அமைப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தி.மு.க அரசு விழித்துக்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

முதலமைச்சரும் இன்று சட்டப்பேரவையில் இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சியில் தான் மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. விவசாயிகள் பாதிக்கக்கூடிய திட்டத்திற்குத் தி.மு.க-தான் திறந்துவிட்டது. இதனால் வேளாண் பெருமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அன்றைக்கே இதைச் செய்யாமல் இருந்திருந்தால் மத்திய அரசும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தி இருக்காது. தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மீது தற்போது அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.இதற்குக் காரணம் தி.மு.க அரசு தான் எனக் குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் பிரச்னையாக இருந்தால் சட்டமன்றத்தில் பேசி தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் இது மத்திய அரசிற்கு உட்பட்ட விவகாரம். ஆகையால் கடிதம் எழுதினால் போதாது. நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது விமர்சித்த தற்போதைய முதலமைச்சர். தற்போது அவரும் கடிதம் தான் எழுதிக்கொண்டு இருக்கிறார் எனத் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்றத்தில் கூட்டணி கட்சியையும் சேர்த்து 38 உறுப்பினர்கள் உள்ளனர். ஆகையால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனங்களாக மாறும் என்ற அச்சத்தில் உள்ளனர். ஆகையால் தி.மு.க எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். இதன் மூலமாகவே தீர்வு காண முடியும். அதைவிடுத்துக் கடிதம் எழுதுவது, துறை சார்ந்த மத்திய அமைச்சரை பார்ப்பது என்பதெல்லாம் சாக்குபோக்குச் சொல்வதாகும். எனவே தி.மு.க அரசு கும்பகர்ணனை போலத் தூங்காமல் தேர்தெடுக்கப்ப்பட்ட எம்.பிக்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். எனவே எம்.பிக்கள் விவசாயிகள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தை ரத்து செய்தவற்கு தி.மு.க எம்.பிக்கள் முழுமூச்சோடு செயல்பட வேண்டும்.இந்த அரசாங்கமும் விவசாயிகள் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்க்காமல் விரைவாகத் திட்டத்தை ரத்துச் செய்யச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com