‘விரைவில் ஒன்றிய அளவில் திராவிட மாடல் பயிற்சிப் பட்டறை நடத்தப்படும்’ என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாநில தி.மு.க இளைஞரணி சார்பில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நேர்காணலில் அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தவர்களிடம் விபரங்களை கேட்டறிந்து அவர்களின் கட்சிப் பணி குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, ‘நான் 4 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க இளைஞரணிக்கு பொறுப்பேற்கும்போது ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் பேரை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், 85 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டது. தற்போது கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளுமாறு நமது தலைவர் கூறியுள்ளார். எனவே அந்த பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது தி.மு.க-வில் 1 கோடி பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்று நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தொகுதி வாரியாக இளைஞர் அணிக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் ஒன்றிய அளவில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் நிலக்கரி எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ. ராஜா கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இருக்கிறார்’ என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ-க்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.