‘அ.தி.மு.க நிர்வாகிகளின் மீது வழக்குப் போடுவதுதான் முதலமைச்சர் செய்யும் ஒரே வேலை’ - கோவையில் சாடிய எடப்பாடி பழனிசாமி

‘அ.தி.மு.க நிர்வாகிகளின் மீது வழக்குப் போடுவதுதான் முதலமைச்சர் செய்யும் ஒரே வேலை’ - கோவையில் சாடிய எடப்பாடி பழனிசாமி
‘அ.தி.மு.க நிர்வாகிகளின் மீது வழக்குப் போடுவதுதான் முதலமைச்சர் செய்யும் ஒரே வேலை’ - கோவையில் சாடிய எடப்பாடி பழனிசாமி

‘அ.தி.மு.க நிர்வாகிகளின் மீது வழக்குப் போடுவதுதான் முதல்வர் செய்யும் ஒரே வேலை’ என கோவையில் நடந்த பாராட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக வருகை தந்த  எடப்பாடி பழனிசாமிக்கு கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். 

இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘அம்மா மறைவுக்கு பிறகு எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகிய இரு பெரும் தலைவர்கள் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த நிலையில் எளிய தொண்டனாக இருந்த நான் பதவி ஏற்றுள்ளேன். 

ஆனால் தி.மு.க-வில் அப்படி வர முடியாது. வாரிசுகள் மட்டுமே தலைவர் பதவிக்கு வந்துள்ளனர். ஜனநாயக ரீதியாக உள்ள கட்சி இந்தியாவில் அ.தி.மு.க மட்டுமே. வேறு எந்த கட்சியிலும் எளிய தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியாது. தி.மு.க ஒரு கம்பெனிபோல் செயல்பட்டு வருகிறது. தி.மு.க-வை பொறுத்தவரை ஆட்சியிலும், கட்சியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் உயர் பதவியில் இருக்கிறார்கள். 

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பொற்கால ஆட்சியை கொடுத்தோம். இரண்டே ஆண்டில் மக்களின் வெறுப்பை சந்திக்கிற அரசாக தி.மு.க அரசு மாறியுள்ளது. மேலும், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவில் தி.மு.க மட்டும்தான்.

அ.தி.மு.க மக்களுக்கு சேவை செய்கிற இயக்கம். முதல்வர் ஸ்டாலின் செய்கிற ஒரே வேலை அ.தி.மு.க நிர்வாகிகளின் மீது வழக்கு போடுவது மட்டுமே. தற்போது அ.தி.மு.க கொண்டு வந்த நிறைய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தது அ.தி.மு.க அரசுதான். அவிநாசி சாலையில் 10 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை மேம்பாலம், கோவை-பொள்ளாச்சி 40 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை கொண்டு வந்ததும் அ.தி.மு.க ஆட்சியில் தான். 

அதேப்போல தி.மு.க எந்த புதிய திட்டத்தையும் கோவைக்கு அறிவிக்கவில்லை. தமிழகத்திலேயே 10 தொகுதியில் வெற்றி பெற்று வரலாறு படைத்த மாவட்டம் கோவை மட்டுமே. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி பேசினார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com