வரும் 6ஆம் தேதி நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான உண்ணாவிரதப் போராட்டம்
காங்கிரஸ் - பா.ஜ.க கட்சியினர் மோதிக்கொள்வதால் மாவட்டத்தில் அமைதி தான் பாதிக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நேற்று மாலை பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை நியாயமாக நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நீண்ட காலம் அரசியல் நாகரீகம் இருந்து வந்தது.கருத்து வேறுபாடு இருந்தாலும்,அதனை பல வழிகளில் நாம் வெளிப்படுத்தி வந்துள்ளோம்.ஆனால் ஒரு கட்சி அலுவலகம் முன்பு தாக்குதல் நடத்தவில்லை.
குமரி மாவட்ட பாஜக அலுவலகத்தைத் தாக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி மூலம் ஏவி விடப்பட்டுள்ளனர்.வாடகை ஆட்களை எடுத்துக்கட்சி நடத்தி வரும் நிலையில் உள்ளது.பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் நடந்து வருகிறார்கள்.அவர்கள் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதேபோன்ற நிலை தொடரும் என்றால், மாவட்ட அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது போன்ற நிலை உருவாகும். இதைக் காவல்துறை சேர்ந்தவர்கள் உருவாக்க பார்க்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.காவல்துறை இப்படித்தான் நடக்கும் என்றால் மாவட்டத்தின் ஒட்டுமொத்த அமைதி பாதிக்கப்படும்.
அரசியல் விளையாட்டுகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் பயன்படுத்தக்கூடாது. குமரி மாவட்ட மக்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும். காவல்துறை நியாயமாக நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 6ஆம் தேதி நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.