அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது முழுவதும் தாமரை மலரும்
பீகார் மாநிலத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி கவிழும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவை பலப்படுத்த அதன் மேலிடம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருகட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜஸ்தான், பீகார், டெல்லி, ஒடிசா ஆகிய 4 மாநில பா.ஜ.க. தலைவர்கள் மாற்றப்பட்டனர். இதற்கான அறிவிப்பை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.
இதில், பீகார் ஓ.பி.சி. தலைவரும் மேலவை உறுப்பினருமான சாம்ராட் சவுத்ரி பா.ஜ.க. மாநிலத் தலைவராகத் அறிவிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரி, கடந்த 2018ம் ஆண்டுதான் பா.ஜ.கவில் இணைந்தார்.
இதனைத்தொடர்ந்து, அவர் கட்சியில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக வளர்ந்து வந்தார். இவர், அரசியல் செல்வாக்குள்ள குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், மேலும் முக்கியத்துவம் அதிகரித்தது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்திற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக மத்திய அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார். அவர், நவாடாவில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அமித் ஷா, 'பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி என்ற பேச்சுவார்த்தைக்கே இனிமேல் இடமில்லை. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் அமைச்சர்கள் பா.ஜ.கவுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளனர். அவர்கள் பா.ஜ.கவை விரும்புகின்றனர்' என தெரிவித்தார்.
மேலும், அவர் பேசுகையில், 'அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பீகார் முழுவதும் தாமரை மலரும். அதன் பின்னர் பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி கவிழும். இதில் எந்த மாற்றமும் இல்லை. நிதிஷ் குமார் போன்றவர்கள் ஒருநாள் கூட பிரதமராக வரமுடியாது. அதேபோல, தேஜஸ்வி யாதவ்வும் பீகார் முதல்வராக முடியாது' என்றார்.