நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிக குறுகிய காலமே உள்ளதால், தேர்தல் வியூகங்களை விரைந்து வகுக்கவேண்டும்
பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் - அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரது சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சந்திப்புக்கு காரணம் குறித்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறிப்பிட்ட சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆளும் கட்சியான தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் தயாராகி வருகிறது. அதேபோல, மத்தியில் உள்ள பா.ஜ.க., தமிழகத்தில் ஏற்கனவே கூட்டணியில் உள்ள அ.தி.மு.கவை தயார்படுத்தி வருகிறது. இரு தரப்பினும் தேர்தல் வியூகங்களையும், கூட்டணியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி குறித்து பா.ஜ.கவைச் சேர்ந்த தலைவர்களுக்கும், அ.தி.மு.கவைச் சேர்ந்த தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது. மேலும், அ.தி.மு.கவில் இருந்து பா.ஜ.கவுக்கும், பா.ஜ.கவில் இருந்து அ.தி.மு.கவுக்கும் கட்சி நிர்வாகிகள் இழுப்பு வேலை மிகவும் தீவிரமாக நடைபெற்றது. இதனால், வரும் தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தொடருமா? என அரசியல் பார்வையாளர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், கூட்டணி பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதேபோல, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தொடர்கிறது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று சென்னக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படும் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? என்பது குறித்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், 'கூட்டணிக்குள் சிறுசிறு சலசலப்புகள், சச்சரவுகள் எல்லாம் இருந்தது. இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் தலைவர்கள் சிலர் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனால், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தொடர்கிறது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தமிழகத்தில் அ.தி.மு.கவுடன் கூட்டணி தொடர்கிறது என்று தெரிவித்துவிட்டார். இதனால், கூட்டணி தொடர்கிறது என்பதை நாங்களும் சரி, அவர்களும் சரி தெளிவுபடுத்திவிட்டோம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே உள்ளதால், தேர்தல் வியூகங்களை விரைந்து வகுக்கவேண்டும். கூட்டணி நகர்வுகளை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனாலும், சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்துப் பேசியது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். இதில் அரசியல் ஏதும் இல்லை' என்றார்.