முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து, சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டுக் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கோலார் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மோடி சமூகத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டி, அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நிறைவில், மார்ச் மாதம் 23ம் தேதி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ராகுல் காந்தி குற்றவாளி என்றும், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. போலீசாரால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால், சூரத் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து, கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது. இதேபோல, வயநாடு மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அவதூறு வழக்கில், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யாதது குறித்து பா.ஜ.க. தரப்பில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால். சூரத் நீதிமன்ற தீர்ப்பு 168 பக்கம் குஜராத்தி மொழியில் உள்ளதால் மொழி பெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், இது தொடர்பாக மூத்த சட்ட வல்லுநர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்ததனர்.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத்திற்கு, நாளை ராகுல் காந்தி செல்ல உள்ளார். அங்கு சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.