ராகுல் காந்திக்கு பரிசாக அதனை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.
எம்பிகளுக்கான அதிகாரபூர்வ இல்லத்தை ராகுல் காந்தி காலி செய்ய அறிவுறுத்தப்பட்டதால், பலரும் தங்கள் வீட்டுக்கு அவரை அழைத்து வரும் வேளையில், தனது சொந்த வீட்டை ராகுலுக்கு எழுதித் தந்து டெல்லி பெண்மணி ஒருவர் அதிரடித்திருக்கிறார்.
மோடி அவதூறு வழக்கில், 2 ஆண்டு சிறைத் தண்டனையோடு எம்பி தகுதி இழப்புக்குm ஆளானார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி. மேலும் அரசு வழங்கிய எம்பிக்கான அதிகாரபூர்வ இல்லத்தை காலிசெய்யுமாறும் அவருக்கு கெடு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 10 வருடங்களாக ஒரு எம்பியாக, எண்.12 துக்ளக் சாலையில் இருக்கும் வீடே, ராகுலின் அடையாளமாக பார்க்கப்பட்ட சூழலில், தற்போது அந்த முகவரியை இழக்கிறார் ராகுல் காந்தி.
இதனையடுத்து நாட்டின் பல்வேறு திசைகளில் இருந்து ’என் வீடே, உங்கள் வீடு’ என்ற முழக்கம் எழுந்ததில், அதுவே சமூக ஊடகங்களின் டிரெண்டிங்காகவும் கடந்த சில தினங்களாக அலையடித்து வருகிறது. அவற்றின் மத்தியில் முத்தாய்ப்பாக டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகியான பெண்மணி ஒருவர் மங்கோல்புரியில் இருக்கும் தனது 4 அடுக்கு வீட்டை ராகுலுக்காக எழுதித் தர முன்வந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி, டெல்லி சேவாதளத்தின் மகளிரணி தலைவியான ராஜ்குமாரி குப்தா என்ற பெண்மணி, “இந்த வீட்டுக்கான இடம் என்னைப் போன்ற பலருக்கு இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது கிடைத்தது. தற்போது அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து வலிய அகற்றப்படும் ராகுல் காந்திக்கு பரிசாக அதனை வழங்குவதில் பெருமை கொள்கிறேன். அவரை நேரில் சந்தித்து உரிய ஆவணங்களை வழங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.