கூடுதாழையில் கடல் அரிப்பு 'அமைச்சரும் பாக்கல ஆட்சியரும் பாக்கல' -முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை குற்றச்சாட்டு
நெல்லை மாவட்டம் கூடுதாழை கிராமத்தில் கடல் அரிப்பு காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.படகுகளை கரையில் நிறுத்த முடியாமல் தவித்து வந்த நிலையில் தூண்டில் வளைவு அமைக்க கோரி 19 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.தூண்டில் பாலம் விரைவில் அமைக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக மீனவர்கள் போராட்டத்தை திரும்பப்பெற்றனர்.
இந்நிலையில் ராதாபுரம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை கூடுதாழை கிராமத்திற்குச் சென்று கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
அதனைத்தொடந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்...'கூடுதாழை கிராமத்தில் கடல் அரிப்பு' அதிகமாக உள்ளது.அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கடல் அரிப்பு ஏற்பட்ட நாட்களிலிருந்து தற்போது வரை மீன்வளத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் யாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்து பார்வையிடவில்லை.மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு விரைந்து தூண்டில் பாலம் அமைக்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் காத்திருக்கின்றனர்.கடந்த 2010 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் கூடுதாழை , கூட்டப்புளி கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ராதாபுரம் கடற்கரை கிராமங்களில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மீனவர் நலனுக்காகத் தூண்டில் வளைவு திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசு.
தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழியில் மின் வளர்ச்சி திட்டத்தை அரசு நிறைவேற்றி வருவதால் கடலில் நீர் அழுத்தம் ஏற்பட்டு கூடுதாழை கிராமம் பாதிக்கப்படுகிறது.அரசு தூண்டில் வளைவு அமைப்பதில் தாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் 'அதிமுக போராட்டத்தைக் கையில் எடுக்கும்' என்றார்.