தயிர் பாக்கெட்களின் மீது தஹி என்ற இந்திச் சொல்லை குறிப்பிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளுக்கு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கடிதம் அனுப்பியது. அதில், ஆவின் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் நந்தினி நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது, தஹி எனப் பெரிய எழுத்திலும், அதைத் தொடர்ந்து அடைப்புக்குறிக்குள் தமிழில் தயிர் மற்றும் கன்னடத்தில் மொசரு என்றும் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் இருமாநிலங்களிலும் சர்ச்சையானதைத் தொடர்ந்து கன்னட அமைப்புகள் சார்பில் உடனடியாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த பால்வளத்துறை அமைச்சர் ஆவடி மு.நாசர், இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சி என்பதால் ஆவின் நிர்வாகம் இந்த உத்தரவை பின்பற்றாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டிருந்த நிலையில், நடைமுறைப்படுத்த முடியாது என ஆவின் நிறுவனம் பதிலளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தி சொல்லை குறிப்பிட வேண்டும் என்ற மத்திய அரசின் நிறுவனமான எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உத்தரவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI,தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். #StopHindiImposition.குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.