இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவி வெறி.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள், தகுதி நீக்கம் ஆகியவற்றிற்கு எதிராக ஓ.பி.எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பி.எஸ். தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப் தனது டிவிட்டர் பதிவில், ’’நேர்மையான வழியைப் பின்பற்றுபவர்களுக்கு வெற்றியும், பின்னடைவும் சரிசமமே. கரங்களில் ஏந்தி இருக்கும் நீதிதராசு சரியாக இருக்கிறதா? என்பதை அறிய நீதி தேவதை ஒருமுறை கண்ணைக் கட்டிய துணியைக் கழற்றி கண் திறந்து பார்த்துச் சரி செய்வது இந்திய இறையாண்மைக்கு நல்லது.
போர்ப்படை தலைவனாகப் பொறுப்பேற்று எதிரியை எதிர்த்து, நெஞ்சை நிமிர்த்து போரிடும் பொழுது, பின் நின்று முதுகில் குத்தும் துரோகக் கூட்டத்தை சிறிது கவனித்தும் தன் இனம் தானே என்று அமைதி காத்ததினால் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டாலும் தலைவரின் எழுந்து நின்று திரும்பிப் பார்த்து துரோகிகளை எதிர்கொள்ளும் போது ஏற்படும் விளைவுகளை எதிர்காலம் அனைவருக்கும் உணர்த்தும்.
எங்கள் கழகத் தலைவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் கால சக்கரத்தால் வழங்கப்படும் இறைவன் தீர்ப்பு வரும் வரை எங்கள் லட்சியப்பயணம் தொடரும். காலைப் பிடித்து பதவி வாங்கி, பதவி வாங்கி பணத்தைச் சேர்த்து, சேர்த்த பணத்தால் கூட்டத்தைக் கூட்டி, கூட்டத்தை வைத்து பதவி பெற நீதியை நிதியால் வளைத்து, பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களைப் பகையாக்கி, இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவி வெறி.
தற்போது நாங்கள் என்ன சொன்னாலும் தங்களது அறிவுக்கு ஏறாது. உங்களை சூழ்ந்து இருக்கும் பதவியும், பணமும் உங்களை விட்டு நீங்கும்போது உண்மைத் தன்மை புரியவரும்; தான் செய்தது தவறு என்று தெரிய வரும். அத்தகைய காலத்தினால் வழங்கப்படும் இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளோடு போராடி பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.