'உதயநிதியின் மகனுடனும் நான் இருப்பேன்' - பேரவையில் உருகிய துரைமுருகன்

'உதயநிதியின் மகனுடனும் நான் இருப்பேன்' - பேரவையில் உருகிய துரைமுருகன்
'உதயநிதியின் மகனுடனும் நான் இருப்பேன்' - பேரவையில் உருகிய துரைமுருகன்

உங்க வயசு என்ன என்று கவர்னர் கேள்வி கேட்டாரு. நான் உடனே 80களில் இருக்கிறேன். ஆனால், நிச்சயம் 100ஐ கடப்பேன்' என்று சொன்னேன்

'நான் முன்பு கலைஞருடன் இருந்தேன். இப்போது, தலைவர் ஸ்டாலின் உடன்  உள்ளேன். ஏன், உதயநிதியுடனும் இருக்கிறேன். இன்னும் சொலப்போனால், உதயநிதியின் மகன் இன்பநிதியுடனும் இருப்பேன்' என அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவையில் பேசியது அனைவரயும் உருக வைத்தது.

தமிழகச் சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் பட்ஜெட் மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நீர்வளத்துறை மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு உருக்கமாக உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், 'என்னைப் பொறுத்தவரையில் நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.கவில் இருந்தவன். இன்னும் இருக்கப்போகிறவன். ஆனால், என்றைக்காவது ஒருநாள் மறையப்போகிறவன். மறைந்த அன்றைக்கு எனக்காகக் கட்டப்படும் சமாதியில், "கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான்" என்று ஒருவரி மட்டும் எழுதினால் போதும்.

தலைவர் கலைஞரின் கோபாலபுரத்து விசுவாசியாக வாழ்ந்தேன். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, 'நீங்க, இன்னும் 100 ஆண்டுகள் கடந்து வாழ்வீங்க' என்று வாழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், 'கவர்னரிடம் சண்டை போட்ட பிறகு, அவரைப் பார்க்கச்சென்றோம். நானும், தலைவர் ஸ்டாலினும்தான் போனோம். அப்போது, எனது வயது பற்றிப் பேச்சு வந்தது. எனது வயது பற்றிக் கவர்னர் ஆர்வமுடன் கேட்டார். அதற்கு முதல்வர், 'எங்க அப்பாவுடன் 53 ஆண்டுகளாக இருந்தவர். இப்போது என்னுடன் இருக்கிறார்' என்று சொன்னார்.

பக்கத்தில் உதயா இருந்தார்.' அவருடனும் இருக்கிறார்' என்றார் கவர்னர். உடனே நான், 'உதயாவுக்கு ஒரு பையன் இருக்கிறான் சார். அவனுடனும் நான் இருப்பேன் என்றேன். அதற்கு, உங்க வயசு என்ன என்று கவர்னர் கேள்வி கேட்டாரு. நான் உடனே 80களில் இருக்கிறேன். ஆனால், நிச்சயம் 100ஐ கடப்பேன்' என்று சொன்னேன்.

இதனைச் சொல்லிக் கொடுத்தது எங்கள் தலைவர் கலைஞர்தான். காரணம் என்னான்னா, "என்னைக்குமே நமக்கு வயசு ஆயிடுச்சுன்னு நினைக்கவே கூடாது. எப்பவும் இளமையாக இருக்கோம்னு நினைக்கணும்" சொல்வாரு. அதனால் நான் 100 வயது வரை நிச்சயம் இருப்பேன்' என்று அவர் பேசியபோது துரைமுருகன் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com