'பல்லை பிடுங்கினாரா நெல்லை ஏ.எஸ்.பி?’-விசாரணை அதிகாரியிடம் மாற்றிப் பேசிய புகார்தாரர்

'பல்லை பிடுங்கினாரா நெல்லை ஏ.எஸ்.பி?’-விசாரணை அதிகாரியிடம் மாற்றிப் பேசிய புகார்தாரர்
'பல்லை பிடுங்கினாரா நெல்லை ஏ.எஸ்.பி?’-விசாரணை அதிகாரியிடம் மாற்றிப் பேசிய புகார்தாரர்

கட்டிங் பிளேயரால் பற்களைப் பிடுங்குவதாகப் புகார் எழுந்தது.

ஏ.எஸ்.பி பல்பீர் சிங், பல்லைப் பிடுங்கி கொடுமைப் படுத்தியதால் பாதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட சூர்யா தற்போது, கீழே விழுந்து தான் பல் உடைந்ததாகவும், காவல்துறைக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் பேட்டியளித்துள்ளார். 

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி.,யை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், விசாரணைக் கமிஷன் முன் புகார்தாரரான சூர்யா மாற்றிப்பேசியுள்ளது இந்த விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் பல்பீர் சிங். இவர் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறு வழக்குகளில் சிக்குவோரைக் காவல் நிலையத்துக்கு அழைத்து, கட்டிங் பிளேயரால் பற்களைப் பிடுங்குவதாகப் புகார் எழுந்தது.

இவரது ஆளுகையின் கீழ் வரும், பாப்பாக்குடி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் காவல் நிலையப்பகுதிகளில் கடந்த சில வாரங்களில் இப்படி பல இளைஞர்களுக்கும் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. அண்மையில் ஜமீன்- சிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர், தனக்கும் இதே போன்று ஏ.எஸ்.பி பல்பீர் சிங்கால் பல் பிடுங்கப்பட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த வேறு மூன்று இளைஞர்கள் தங்கள் மீதான விசாரணையின்போது ஏ.எஸ்.பி.,யால் பற்கள் பிடுங்கப்பட்டதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் புகார்கள் சென்றன.

இதுகுறித்து விசாரித்து அறிக்கைத் தர சேரன் மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலத்துக்கு, நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இதில், பாதிக்கப்பட்ட இளைஞர்களான லெட்சுமி சங்கர், சுபாஷ், வெங்கடேஷ், சூர்யா ஆகியோர் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களுடன் உதவி ஆட்சியர் முன்பு நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனிடையே மனித உரிமைகள் ஆணையமும் இப்பிரச்சினையைத் தானாகவே முன்வந்து கையில் எடுத்தது. இந்நிலையில், பல்வீந்தர் சிங் சம்பவம் நடந்த உடனேயே காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, இன்று அவர் இடைநீக்கமும் செய்யப்பட்டு உள்ளார். இதை இன்று சட்டசபையிலேயே முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், விசாரணை ஆணையரான சேரன் மகாதேவி சப்-கலெக்டர் சபீர் ஆலம் முன்னிலையில் இன்று ஆஜரான பாதிக்கப்பட்ட புகார்தாரர்களில் ஒருவரான சூர்யா, “என் பல் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் கீழே விழுந்ததில் தான் என் பல் உடைந்தது ” என விளக்கம் அளித்துள்ளார். இதனால், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com