கர்நாடகா மாநிலத்தில் தற்போது முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமுலுக்கு வருகின்றன
கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டப்பேரவைக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில், 'மே 10ம் தேதி வாக்குப்பதிவு, மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்' என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாகப் புதிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தலைமை தேர்தல் ஆணையம் உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இன்று காலை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், 'கர்நாடக சட்டப்பேரவையில் 224 தொகுதிகள் உள்ளது.
இந்த 224 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 224 தொகுதிகளில் மொத்தம் 2.51 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2.26 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 2.59 பேர் பெண் வாக்காளர்கள். முதல் முறை வாக்காளர்களில் 9.17 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.
மாநிலத்தில். மொத்தம் 36 தனித் தொகுதிகளும், 173 பொதுத் தொகுதிகளும், உள்ளன. மொத்தம் 58,782 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது முதல் கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமுலுக்கு வருகின்றன.
வரும் மே மாதம் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மே மாதம் 13 ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து, அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும். முன்னதாக, ஏப்ரல் 13ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 20ம் தேதி மனுதாக்கல் முடிவு பெறுகிறது. ஏப்ரல் 21ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும்' எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அங்கு தேர்தல் களம் சூடு பிடித்திருந்தது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல, காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.