ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சித்துணைத் தலைவர் பதவியைப் பறிக்கும் வேலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என, சபாநாயகருக்கு அ.தி.மு.க. சார்பில் இன்று மீண்டும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, சபாநாயகரை எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.கவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வந்தனர். இதில், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனிடையே, அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருதரப்பிலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் குறித்துச் சபாநாயகர் அப்பாவுக்குக் கடிதம் கொடுத்திருந்தனர். தமிழகச் சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சார்பில், ஏற்கெனவே சபாநாயகருக்கு பரிந்துரை வழங்கப்பட்டது. ஆனால், அதன் மீது அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி மீண்டும் பேரவைத் தலைவரை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கே.செங்கோட்டையன் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் குறித்தும், பேரவைத் தலைவருடனான சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்காத காரணத்தால் அந்தக் கூட்டத்தொடர் முழுவதையும் அ.தி.மு.கவினர் புறக்கணித்தனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும், கடந்த ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் என்றும், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேபோன்று, பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2 ஆயிரத்து 460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க. சட்டமன்றக் கொறடா எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்றும், அதற்கான இருக்கையை அவருக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருவதால், இந்தக் கூட்டத் தொடரின்போது ஆன்லைன் மசோதா குறித்து ஒவ்வொரு கட்சிக்கும் வாய்ப்பு வழங்கிய நிலையில், அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சித்துணைத் தலைவர் பதவியைப் பறிக்கும் வேலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
- கே.என்.வடிவேல்