அ.தி.மு.க விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் நீதிபதி குமரேஷ் பாபு, ‘சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்’ என தீர்ப்பளித்தார்.
மேலும் ‘அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிவுகளை வெளியிட தடை இல்லை’ என்று தீர்ப்பில் கூறியுள்ளதோடு ‘அ.தி.மு.க உறுப்பினர்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது’ என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். அவருடைய மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கின்றனர்.