ராகுல் காந்தியின் சாவர்கர் கருத்து கூட்டணிக்கு அச்சுறுத்தல்- சரத் பவார்

ராகுல் காந்தியின் சாவர்க்கர் கருத்து கூட்டணிக்கு அச்சுறுத்தல்- சரத் பவார்
ராகுல் காந்தியின் சாவர்கர் கருத்து கூட்டணிக்கு அச்சுறுத்தல்- சரத் பவார்

பிளவுகளை உருவாக்கும் எந்த அறிக்கையையும் வெளியிட வேண்டாம்.

ராகுல் காந்தியின்  சாவர்க்கர்  குறித்த  கருத்துகளுக்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்புக் காட்டி இருந்த நிலையில்,  சாவர்க்கர்  குறித்த கருத்துக்களை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும் என்று சரத் பவார் அறிவுறுத்தியுள்ளார். 
தேசியவாத காங்கிரஸ்,  சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளை ஒன்றிணைத்து 2019 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணியை உருவாக்கியிருந்தார் சரத் பவார். இந்நிலையில், சவார்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தும் என்பதை அறிந்து சரத் பவார் சமரசம் ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரிடமும் இது குறித்து சரத் பவார் பேசியதாக கூறப்படுகிறது. நேற்று மாலை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டிய எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சரத் பவார் இந்த விவகாரத்தை எடுத்துக் கூறியுள்ளார். 
அப்போது, ’’மகாராஷ்டிராவில் மரியாதைக்குரியவராக கருதப்படும்  சாவர்க்கர்  குறிவைத்து பேசுவது மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு உதவாது.  சாவர்க்கர்  ஒருபோதும் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்ததில்லை. எதிர்க்கட்சிகளின் உண்மையான போராட்டம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுடன் தான்’’என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், "நாம் ஜனநாயகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். சர்ச்சைகள் பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும். உணர்ச்சிப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்து, உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்’’என்று சரத் பவார் எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து  சாவர்க்கர் மீதான விமர்சனத்தை குறைத்துக் கொள்வதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், ‘’காங்கிரஸ் கட்சி இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்க முடிவு செய்திருந்தால் அது நல்லது. நான் ராகுல் காந்தியிடம் பேசினேன்’’ எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில், "19 கட்சிகள் இப்போது கூட்டணியில் உள்ளன. அதில் சிவசேனாவும் அடங்கும். நேற்று இரவு 18 கட்சிகள் மட்டுமே இருந்தன. (சிவசேனா நேற்று நடந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்தது) சிவசேனா குழுவில் இருந்தால் மட்டுமே அது 18 ல் இருந்து 19 ஆக மாறும்" என்று கூறினார்.
இந்து சித்தாந்தவாதியான  சாவர்க்கரை, ராகுல் காந்தி அடிக்கடி விமர்சிப்பது காங்கிரஸுக்கும், சிவசேனாவிற்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சனிக்கிழமையன்று, இங்கிலாந்தில் ஜனநாயகம் குறித்த அவரது கருத்துக்களுக்காகவோ, சிறைத் தண்டனைக்கு வழிவகுத்த "மோடி குடும்பப்பெயர்" கருத்துக்காகவோ மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி "என் பெயர் சாவர்க்கர் அல்ல. என் பெயர் காந்தி. காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது சாவர்கரைப் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கள் சிவசேனா கட்சியினரை ஆத்திரப்படுத்தியது. ராகுல் காந்தியின் சமீபத்திய பேச்சு குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்ரே, "நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம் என்பதை ராகுல் காந்தியிடம் கூற விரும்புகிறேன். இந்த நாட்டில் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். ஆனால், பிளவுகளை உருவாக்கும் எந்த அறிக்கையையும் வெளியிட வேண்டாம். பா.ஜ.க.,வினர் உங்களைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இந்த நேரத்தை நாங்கள் தவறவிட்டால், நம் நாடு நிச்சயமாக எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும்’’ என எச்சரிக்கை விடுத்து இருந்தார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com