பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்குகளின் மீதான தீர்ப்பு குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஆகிய 2 வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி காலை 10.30 மணிக்கு நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ‘சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ‘அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிவுகளை வெளியிட தடை இல்லை’ என தீர்ப்பில் கூறியுள்ளதோடு ‘அ.தி.மு.க உறுப்பினர்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது’ என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்ததை தொடர்ந்து அ.தி.மு.க அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கூட்டம் களைகட்டி உள்ளது.
இதற்கிடையே இந்த தீர்ப்பு எதிரொலியாக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அ.தி.மு.க தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி ‘அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.