அதிமுக விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தும், ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழுவை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அத்துடன், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவில் வழக்காக தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் மற்றும் பரிசீலனை முடிவடைந்துள்ளது. மனுக்கள் பரிசீலனையில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டதாக அ.தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் தாக்கல் செய்த வழக்கில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க தரப்பில் இருந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கிலும் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவு பெற்ற நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஆகிய 2 வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. காலை 10.30 மணிக்கு நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்க உள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2 வழக்குகளில் தீர்ப்பு வெளியாவதையொட்டி அ.தி.முக.வில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.