வன்முறைப் பேச்சு; அவதூறு வழக்கு - புதிய வழக்கால் சீமானுக்கு என்ன சிக்கல்?

வன்முறைப் பேச்சு; அவதூறு வழக்கு - புதிய வழக்கால் சீமானுக்கு என்ன சிக்கல்?

வன்முறைப் பேச்சு; அவதூறு வழக்கு - புதிய வழக்கால் சீமானுக்கு என்ன சிக்கல்?

‘பேச்சு சுதந்திரம் என்பது வேறு; அவதூறு பேசுவது என்பது வேறு’ என தி.மு.க விளக்கம்

திருச்சியில் காவல்துறையினரின் அனுமதி இன்றி போராட்டம் நடத்திய, நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், முருகன், சாந்தன் உள்ளிட்ட நான்கு பேரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 23ம் தேதி மாலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காவல்துறையின் தடையை மீறி நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காவல்துறையினரின் அனுமதி இன்றி இந்த போராட்டம் நடைபெற்றதாக, சீமான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது திருச்சி  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் அவதூறாக பேசியதாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், திருச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

"காவல்துறையினர் வழக்கு போடும் அளவு ஏன் நடந்து கொண்டீர்கள்? சட்டம் - ஒழுங்கு  சரியாக செயல்பட அரசுக்கு ஒத்துழைக்க வேண்டாமா? இது போன்ற வழக்குகளை நாம் தமிழர் கட்சியினர் எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?" என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தியிடம் கேட்டபோது, "ஈழத்தமிழர் விடுதலை விவகாரத்தில் பேரறிவாளன் உள்ளிட்டோர் 7 பேர் விடுதலை செய்யப்பட்ட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. இதில், பேரறிவாளவன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை பெற்றனர். மகிழ்ச்சி.

 ஆனால், விடுதலை செய்யப்பட்டவர்களில் 4 பேர் ஈழத்தமிழர்கள். அதில், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகிய 4 பேரும் ஈழத்தமிழர் என்பதால், சிறப்பு முகாமில் அடைத்தனர். வெளி உலகத்தைப்பொறுத்தவரை அவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்று தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையில், அவர்கள் வேறு ஒரு தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் நமது கோரிக்கை என்னவென்றால், அவர்களுக்கு மாற்று இடம் கொடுங்கள். வெளிநாடு செல்லவேண்டும் என்றால், சட்ட உதவி செய்து அனுப்பிவையுங்கள் என்பதே.

இந்த கோரிக்கையை வலியுறுத்தித்தான் அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை  முன்னெடுத்தோம். ஆனால், போலீசாரிடம் பல முறை கேட்டும் முறையான பதில் சொல்லவில்லை. இதனால், நாங்கள் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தி, கருத்துக்களை பதிவு செய்துவிட்டு அமைதியாக திரும்பிவிட்டோம். அதில், ஒரு வன்முறையோ அல்லது அசம்பாவிதமோ நடைபெறவில்லை. அன்று அண்ணன் சீமான் பேசும்போதுகூட, 'ஈழத்தமிழர்கள் 4 பேரை உடனே விடுதலை செய்யுங்கள். உங்களுக்கு (தி.மு.கவுக்கு) நெருக்கடி வந்தால், நாங்கள் (நா.த.க) துணை நிற்கிறோம்' என்று தான் சொன்னார்.

இந்த போராட்டத்தை பயன்படுத்தி எங்கள் மீது வழக்கு போடுவது, அடக்குமுறையின் உச்சம். இது கருத்து உரிமைக்கு எதிரானது. டெல்லியில் ராகுல் பேசினால், அவரது கருத்துரிமை பறிக்கப்படுவதாக பேசிவிட்டு, தமிழகத்தில் சீமான் போன்றவர்கள் பேசினால், அவர்கள் மீது தொடர்ந்து வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம். இதுவும் ஒரு ஜனநாயக படுகொலை தான். இது நா.த.க. மீது தி.மு.க-வுக்கு உள்ள காழ்புணர்ச்சியைத்தான் காட்டுகிறது.

இன்றைய தி.மு.க. அரசுக்கு எந்த கொள்கையும் இல்லை. கோட்பாடும் இல்லை. நாங்கள் கேள்வி கேட்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அ.தி.மு.க. போன்ற கட்சிகள், அவர்களிடம் எதையும் கேள்வி கேட்காமல் விட்டுவிடுவதால் அவர்களை மதிக்கிறார்கள். எங்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்டு அழிக்கலாம் என நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.

திருச்சியில் வன்முறை வெறியாட்டம் நடத்தியது தி.மு.கவினர் தான். நாங்கள் அல்ல. திருச்சி சிவா எம்.பி. வீட்டிலும், காவல் நிலையத்திலும், அமைச்சர் கே.என்.நேருவின் ஆட்கள் தாக்குதல் நடத்தினார்கள். இது ஊர் உலகத்திற்கே தெரியும். அவர்கள் செய்வதை எல்லாம் செய்துவிட்டு எங்கள் மீது பழி போடுகிறார்கள்.

பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு வழக்கு, சிறைக்கு அஞ்சக்கூடாது. அதனால், தி.மு.கவினர் எத்தனை வழக்குகள் போட்டாலும், அதை எதிர்கொள்ளும் மனதிடமும், வலிமையும் எங்களிடம் உள்ளது. அதனால், இந்த வழக்குகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்" என ஆவேசம் காட்டினார்.

"நாம் தமிழர் கட்சியின் புகாருக்கு தி.மு.கவின் பதில் என்ன?" என்று தி.மு.க. இணை செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது, "பேச்சு சுதந்திரம் என்பது வேறு. அவதூறு பேசுவது என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. அவர்கள் பேச்சு சுதந்திரத்தைப் பயன்படுத்தி யார் மீது வேண்டும் என்றாலும் அவதூறு பரப்பலாம் என நினைத்துக் கொண்டு, வாய்க்கு வந்தபடி பேசி அவதூறு பரப்புகின்றனர். அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். வேடிக்கை பார்க்கமுடியும்.

சீமான் கலந்து கொள்ளும் அத்தனை கூட்டத்தின் மீதும் காவல்துறை வழக்கு போடுகிறதா? இல்லையே. அவர்கள் தவறு செய்யும் போது தான் அங்கு காவல்துறை செல்கிறது. அவர்கள் தவறு செய்தால், காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்களா?

ராகுல்காந்தி விவகாரம் என்பது வேறு. அவருக்கு நிகராக சீமான் போன்றவர்களை வைத்து பேசுவது நியாயமற்றது. சீமான் விவகாரத்தில் சட்டம் தன் கடைமையைச் செய்துள்ளது. அவர் பக்கம் நியாயம் உள்ளது என்றால், அவர் அதை  நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்" என்றார்.

கே.என்.வடிவேல்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com