நான் ஓயப்போவதில்லை என ராகுல் காந்தி ஆவேசம்
'என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும், சிறையில் அடைத்தாலும் நான் ஓயப்போவதில்லை' என நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி ஆவேசம் காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'பிரதமர் மோடியை கண்டு நான் அஞ்சவில்லை. நான் எழுப்பும் கேள்விகளை கண்டு பிரதமர் மோடிக்குத்தான் பயம் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகம் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக நான் ஏற்கெனவே பலமுறை தெரிவித்துள்ளேன். அது தற்போது நடந்துள்ளது. நாடாளுமன்றத்தில் தொழில் அதிபர் அதானி குறித்து நான் கேட்டதன் எதிரொலியாகவே இந்த நடவடிக்கையை பார்க்கிறேன்.
அதானி குழுமத்தில் சில முதலீடுகளில் சீனாவுக்கு தொடர்பு உள்ளது. அதானி நிறுவனத்திற்கு ரூ.20,000 கோடி முதலீடு எப்படி வந்தது? யார் கொடுத்த பணம்? என, கேள்வி எழுப்பியவர், 'அதானி- மோடி இடையே உள்ள உறவு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்' என்றார்.
தொடர்ந்து பேசியவர், 'நான் பேசியது நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நான் பேசியது குறித்து சபாநாயகரிடமும் விரிவாக விளக்கமளித்தேன். ஜனநாயகம் பற்றி பேசும் பா.ஜ.க மக்களவையில் என்னை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என்பதற்காக போராடுகிறேன்.
நான் இனி கேள்வி கேட்க கூடாது என, என்னை தகுதிநீக்கம் செய்துள்ளனர். என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும் சரி அல்லது சிறையில் அடைத்தாலும் சரி, நான் ஓயப்போவதில்லை' என ஆவேசம் காட்டியுள்ளார்.