ராகுல் காந்தியின் வழக்கில் மேல்முறையீடு செய்தால் அங்கு இடைத்தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது
அவதூறு வழக்கில் நேற்று முன்தினம் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று தொகுதி காலியானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அவதூறு வழக்கில் 23ம் தேதி சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
போலீசாரால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக ஜாமீனும் வழங்கப்பட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து, கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது. இதேப்போல, வயநாடு மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், ஜலந்தர் மற்றும் லட்சத்தீவு ஆகிய மக்களவை தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது பைசல், கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த உடனே பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தில் முகமது பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து, முகமது பைசலின் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், அங்கு நடைபெற இருந்த இடைதேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதுபோல, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ராம்பூர் சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ. ஆசம்கான், வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றதால், அங்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், ஆசம்கான் தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால், மேல்முறையீட்டு மனுவின் முடிவு வரும் வரை அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால், அங்கும் நடைபெற இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதனால் ராகுல் காந்தியின் வழக்கில் காங்கிரஸ் மேல்முறையீடு செய்தால் அதன் மீதான தீர்ப்பு வெளிவர சில மாதங்கள் ஆகும். இதனால், அங்கு இடைத்தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.