கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கில் 23ம் தேதி சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. மேலும், இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. போலீசாரால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக ஜாமீனும் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சூரத் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தகுதி நீக்க சட்டப்பிரிவு அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும், தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு சட்டவிரோதமானது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3) பிரிவை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு அரசியல் கட்சி தலைவர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.