சர்வாதிகாரிகளின் கொடுங்கோல் ஆட்சியை போல மோடி அரசு செயல்படுகிறது
மக்களவை எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து எதிர்ப்பும்-ஆதரவும் கிளம்பியுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை. நாட்டை ஆளும் பா.ஜ.க அரசு தனது அதிகார பலத்தைக் கொண்டு, அத்துமீறலும், அடாவடித்தனமும் செய்து, தன்னாட்சி அமைப்புகளை முறைகேடாகக் கையகப்படுத்தி, எதிர்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் சதிச்செயலை அரங்கேற்றுவது கொடுங்கோன்மையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’ராகுல் காந்தியை பார்த்து எந்தளவுக்கு பா.ஜ.க தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன் மூலம் நன்றாகத் தெரிகிறது. ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்; அவர் மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல். நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை. 2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மாவட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு தந்துள்ளது. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுகளுக்குச் சரியான பதிலை ஒன்றிய அரசில் இதுவரை யாரும் சொல்லவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை; ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியை குழிதோண்டி புதைத்த செயலாகும். தீர்ப்பைக் காரணம் காட்டி 24 மணி நேரத்தில் ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது பாஜகவின் ஆணவ அக்கிரமத்தை காட்டுகிறது. ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் போன்ற சர்வாதிகாரிகளின் கொடுங்கோல் ஆட்சியை போல மோடி அரசு செயல்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., கூறுகையில், "எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கிவிட வேண்டும் என்ற அவர்களின் கடமை உணர்ச்சியை காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,“ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளையும் பாஜக பயன்படுத்திவிட்டது; உண்மை பேசுபவர்களை அவர்கள் சும்மா விடுவதில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் சிறைக்கு செல்லவும் தயார்”எனத் தெரிவித்தார்.
சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே கூறுகையில், ‘’திருடனை திருடன் என்று அழைப்பது நாட்டில் குற்றமாகிவிட்டது. திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ளனர். ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டுள்ளார். இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. சர்வாதிகாரம் முடிவதற்கான தொடக்கப்புள்ளி இது’’ எனத் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘’பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளனர். குற்ற பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்காக தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் ஒரு புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறுகையில், ‘’காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறுகையில், ராகுல்காந்தி மக்களவை வரக்கூடாது, அவரது குரல் ஒலிக்கக்கூடாது என்று பாஜக இப்படி செய்து உள்ளது. இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் இதனை நாங்கள் எடுத்து செல்வோம்’’ என கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து, ‘’ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய நடவடிக்கைகள் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை தடுக்காது’’ என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து, ‘’ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும். சட்டம் அனைவருக்கும் பொருந்தும், அதுதான் ஜனநாயகம். ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்ட தண்டனையாக இருக்கும்போது, பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று கூறினார்.