அரசியல்
தஞ்சை: விவசாயிகளிடம் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் - ஒப்புக்கொண்ட ஆர்.டி.ஓ
தஞ்சை: விவசாயிகளிடம் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் - ஒப்புக்கொண்ட ஆர்.டி.ஓ
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு அறுபது ரூபாய் லஞ்சம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு அறுபது ரூபாய் லஞ்சம் வாங்குவதாக விவசாயி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பொறுப்பு அதிகாரி மணிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு பகுதி சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொண்டு வரக்கூடிய விவசாயிகளிடம் 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதாகவும், மேலும் எடை கூடுதலாக வைத்து ஒரு மூட்டைக்கு 3 கிலோ 4 கிலோ வரை நெல்மணிகளை அதிகளவு பிடித்து விவசாயிகளுக்கு பெருமளவு இழப்பு ஏற்படுத்துவதாகவும் இது விவசாயிகளிடமிருந்து பகல் கொள்ளை அடிப்பது போல் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்து விவசாயிகள் முகமூடி கொள்ளையர்கள் போல் முகமூடியை அணிந்து கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர். உடனடியாக இந்த விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இல்லை என்றால் வருங்காலத்தில் மூட்டைக்கு நூறு ரூபாய் ஆகிவிடுமோ என அச்சம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவதும் தலைவிரித்து ஆடுவது உண்மைதான் என விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பகிரங்கமாக கோட்டாட்சியர் ஒப்புக் கொண்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயிகளின் புகார்களுக்கு பதில் அளிக்குமாறு கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் கோட்டாட்சியர் கூறினார். ஆனால், கூட்டத்திற்கு கொள்முதல் நிலைய அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதை தெரிந்து கொண்ட கோட்டாட்சியர் கோபம் அடைந்து, ’போன் போட்டு வர சொல்லுங்க’ என உதவியாளருக்கு உத்தரவிட்டார். ’’அறுவடை காலம் தொடங்கிவிட்டால் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதும், லஞ்சம் தலைவிரித்து ஆடுவதும் வாடிக்கையாகி விட்டது’’ என பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் கோட்டாட்சியர் இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.