'தமிழக பாஜக கூண்டுக்கிளி அல்ல' - அண்ணாமலை ஆவேசம்

'தமிழக பாஜக கூண்டுக்கிளி அல்ல' - அண்ணாமலை ஆவேசம்
'தமிழக பாஜக கூண்டுக்கிளி அல்ல' - அண்ணாமலை ஆவேசம்

2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெறும்-அண்ணாமலை நம்பிக்கை

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக செயல் வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் நடைப்பெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முத்துராமலிங்க தேவர்' வ.உ.சி மற்றும்  அம்பேத்கர், காமராஜர்  சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சி இந்தியாவின் போக்கால் ஆட்சியாகும்.பிரதமர்  மோடிக்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் மக்களை அரசியலுக்கு பயன்படுத்தினார்கள். ஆனால், மோடியோ மக்களின் வளர்ச்சிக்காக அரசியல் செய்கிறார். பழங்குடியினர் பெண்ணை ஜனாதிபதி ஆக்கப்பட்டதன்  மூலம் பழங்குடியின சமூகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி.

 11 கோடி கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளன. ஓபிசி  மற்றும் பட்டியல் மக்களை  மையமாக வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.அதனால் தான் பாஜக தொடர்ந்து வெற்றிகள் பெற்று வருகிறது.ஆனால் தேர்தலில் தோற்கும் போதெல்லாம் அதற்கு ஒரு காரணத்தை சொல்கிறது  எதிர்க்கட்சிகள். 2024 தேர்தலில் அவர்கள் காரணத்தை தேட நினைக்கிறார்கள். 

சிறுபான்மையினர் அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தொடர் வெற்றி பெற்று வருகிறது. கிறிஸ்தவர்கள் நிறைந்த கோவாவில் பாஜக ஆட்சி தொடர்கிறது. கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்று கருதப்பட்ட திரிபுராவில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. கோவா, திரிபுரா, அஸ்ஸாம் போல தமிழகத்திலும் களம்  மாறி கொண்டு வருகிறது.கிளியை  கூண்டுக்குள் வைத்துக் கொண்டு வா என்றால்  வராது. தற்போது  தமிழக பாஜக சுதந்திர கிளியாகிவிட்டது. இப்போது நாம் கூண்டுக்கிளிகள் அல்ல. பறக்க தயாராக இருக்கிறோம். மக்கள் நம்மை ஆதரிக்க தயாராகி விட்டார்கள்.  நம்மை அடைத்து வைத்திருந்த கூண்டு உடைக்கப்பட்டு விட்டது. தமிழக பாஜகவினருக்கு நம்பிக்கை வந்து விட்டது. நம்பிக்கை வந்தால் புரட்சி வரும். அதற்கான நேரம் இதுதான்’’என்றார். 

மேலும் தொடர்ந்து  பேசிய அவர், ’’தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. வில்லங்க நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்கிறார்கள். அதில் வரும் லாபத்தை ஓட்டுக்கு பணமாக கொடுக்கிறார்கள்  இதுதான் திராவிட மாடல்  ஆட்சி.  அமைச்சர்கள் அனைவரும் கொள்ளை அடிக்கிறார்கள். தூத்துக்குடியில் ஒரு  அழுகிய முட்டை அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் அமைச்சர் கீதா ஜீவன். நான் தூத்துக்குடி வந்தால் வெட்டி  விடுவோம் என்று சொன்னார்கள் .நான் தற்போது  தூத்துக்குடியில் தான் இருக்கிறேன். உங்களால் என் ஒரு தலை முடியை கூட வெட்ட முடியாது.  அப்பா பெயரை  வைத்து கொண்டு அரசியல் செய்யும் உங்களுக்கு இவ்வளவு இருந்தால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும். 

தமிழகத்தில் நமக்கான நேரம் வந்து விட்டது. 1985-தேர்தலில் குஜராத்திலும் ஆந்திராவிலும் பாஜக ஒரு எம்பி தொகுதி வெற்றி பெற்றது. இன்று குஜராத் முழுமைக்கும் பாஜக கொள்கை  ஆனால் ஆந்திராவில் அதே நிலைமை தான் இருக்கிறது. அதற்குக் காரணம் கூட்டணி வைத்து போட்டியிட்டது தான். 

 2024 நம் காலம் தான் நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்போம்.  2024 பாராளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் இருந்து பாஜகவுக்கு ஒரு எம்பி வேண்டும். நம் கட்சி எம்பி ஒருவர் டெல்லி போனால் தான் இங்குள்ள மக்கள் பிரச்சனைகள் தீரும். 2024 தேர்தலில் மீண்டும் மோடியை வெற்றி பெற்று பிரதமர் ஆவார். அப்போது தமிழகத்தில் நாமும் வெற்றி பெற வேண்டும். 

ஓட்டுக்கு பணம்  கொடுப்பது ஐயா வ .உ.சி காலத்திலேயே தொடங்கிவிட்டது. அவரது கப்பல் கம்பெனியை மூழ்கடிக்க தந்திரமாக ஆங்கிலேயர்கள் குடையை இலவசமாக கொடுத்து வீழ்த்திக் காட்டினார்கள். அன்று தான் இலவசம் இங்கு ஆரம்பிக்க தொடங்கியது. பெருந்தலைவர் காமராஜரின் கனவு பாஜக ஆட்சியில் நினைவாக்கப்பட்டு வருகிறது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலம் தான் இருக்கிறது. குட் கமிட்டி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதெல்லாம் மாயை. மக்கள் மனது வைத்தால் ஓட்டு போடுவார்கள். அவர்கள் மனதை வெல்ல வேண்டும் அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களை தட்டி எழுப்ப வேண்டும். நீங்க எல்லோரும் மக்களிடம் பேச வேண்டும். மாற்றம் வந்துவிட்டது. நம்முடைய  பாதை சிங்க பாதை. 2024-2026 தேர்தலில் வெற்றி நிச்சயம். நாம் கூண்டு கிளி  இல்லை. சுதந்திர பறவையாக பறக்க போகிறோம் மாற்றம் நடக்கும். அந்த மாற்றம் தூத்துக்குடியில் இருந்து தொடங்கட்டும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com