‘தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க-வை தவிர வேறு கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை’ என, சட்டப்பேரவையில் கே.பி.முனுசாமி பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். மசோதாவை வரவேற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பேசினர். இந்த வரிசையில் அ.தி.மு.க சார்பில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ பேசினார்.
கடைசியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச அனுமதி கேட்டதால் அவருக்கு சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி அளித்தார். அப்போது ‘ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதாவை அ.தி.மு.க சார்பில் முழுமையாக நான் வரவேற்கிறேன்’ என கூறினார்.
இதனால் எடப்பாடி அணி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த அ.தி.மு.க உறுப்பினர்கள் கூச்சலிட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி இன்று சட்டப்பேரவையில் பேசும்போது, ‘தி.மு.க-வை எதிர்த்தால்தான் நாங்கள் ஆட்சிக்கு வர முடியும். ஒரு கட்டத்தில் தி.மு.க-வை நாங்கள் எதிர்த்தே ஆக வேண்டும்.
தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க-வை தவிர வேறு கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை. இருவரும் அடித்துக் கொள்ள வேண்டும். திமுகவை எதிர்த்தால்தான் எங்களால் அடுத்து ஆட்சிக்கு வர முடியும்’ என பேசினார்.
தமிழ்நாட்டில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வென்று பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பேசி வரும் நிலையில் கே.பி.முனுசாமி பேசி உள்ள கருத்து பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுக்கும் ஒன்றாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.