ஒரு கட்சிக்கு ஒருவர் என கூறிவிட்டு, ஓ.பன்னீர்செல்வத்தை பேச எப்படி அனுமதித்தீர்கள்" என கேள்வி
இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்ட மசோதாவை அ.தி.மு.க. முழுமையாக ஆதரிக்கிறது என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன்வடிவினை மீண்டும் நிறைவேற்றிட கோரும் தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றினார்.
பேரவையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தது. இந்த நிலையில், "ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்" என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "ஆன்லைன் ரம்மி தடை செய்யும் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முழு ஆதரவு வழங்குவதாக" தெரிவித்தார்.
இதற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "ஒரு கட்சிக்கு ஒருவர் என கூறிவிட்டு, ஓ.பன்னீர்செல்வத்தை பேச எப்படி அனுமதித்தீர்கள்" என, எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த பேரவை சபாநாயகர் அப்பாவு "எனக்கும், இந்த பேரவைக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை" என விளக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்ட மசோதா தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.