ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு உரிமை உண்டு
'ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு உரிமை உண்டு' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், சட்டப் பேரவையில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்ட மசோதாவையும் முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளினால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு வருவதால், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆளுநர் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு அன்றைய தினமே ஒப்புதல் அளித்தார் ஆளுநர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்கக்கோரிய மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், நவம்பர் 24ம் தேதி ஆளுநர் தரப்பில் இருந்து சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பட்டது. தமிழக அரசு 25ம் தேதி விளக்கமும் அளித்தது.
ஆனால், இந்த சட்டத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்றும், சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி வைத்தாகவும் தகவல் வெளியானது. இதன் தொடர் முயற்சியாக சட்டப்பேரவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய கடந்த மார்ச் 9 தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையும் அமைச்சரவையில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரவையில், ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் தாக்கல் செய்து பேசினார். அப்போது, "தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை வினோத்குமார் தனது மரணமே இறுதியாக இருக்கும் என கடிதம் எழுதியிருக்கிறார். இதனால், நான் கனத்த இதயத்தோடு இந்த அவையில் நின்று கொண்டுள்ளேன்.
மேலும், ஆன்லைன் ரம்மி மூலம் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பில் மாணவர்களின் நுண்ணறிவு எழுத்து திறனில் பாதிப்பு ஏற்பட்டதாக குழு பரிந்துரைத்தது.
இணையதள விளையாட்டு உரிமையாளர்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனையில் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. ஆளுநர் அக்டோபர் 1ம் தேதி அனுமதி அளித்தார். 3ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. எனவே, மீண்டும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
மக்கள் அனைவரையும் ஒழுகுப்படுத்தவும் நெறிப்படுத்தவும், பாதுகாக்கவும், மாநில அரசுக்கு உரிமை உண்டு. மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு. தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் இது தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறது என்று மிகத் தெளிவாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.