வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ம் தேதி தமிழ்நாடு அரசு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் உழவன் அமைப்பை நடத்தி வரும் நடிகர் கார்த்தி தமிழக அரசுக்கு சில யோசனைகளை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில், ’வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுகள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலை பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு, மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்துக்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
இதோடு மட்டுமின்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும் அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுபோன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால் அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்’’ என நடிகர் கார்த்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.